

இயற்கை எரிவாயுக்களின் பயன்பாட்டை உயர்த்துவதற்கு, மத்திய அரசு திட்டம் வகுத்து இருக்கின்றதா என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விக்கு, மத்திய பெட்ரோலியத் துறை இன்று விளக்கம் அளித்துள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சரிடம், "இயற்கை எரிவாயுக்களின் பயன்பாட்டை உயர்த்துவதற்கு, அரசு திட்டம் வகுத்து இருக்கின்றதா? இந்தியாவில் எத்தனை நகரங்களில், குழாய்கள் வழியாக வீடுகளுக்குத் தரப்படுகின்றது" ஆகிய கேள்விகளை வைகோ எழுத்துபூர்வமாகக் கேட்டிருந்தார்.
வைகோவின் கேள்விகளுக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று எழுத்துபூர்வமாக அளித்த விளக்கத்தில், "இயற்கைச் சூழலைக் கெடுக்காத படிம எரிவாயுக்கள், நாட்டின் எரிபொருள் தேவையில் பெரும்பங்கு வகிக்கின்றன. அவற்றின் பயன்பாட்டைப் பெருக்குவதற்காக, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
உள்நாட்டில் கூடுதலாகப் பெறுவது, எரிவாயுத் தொகுப்புகளை உருவாக்குவது, வெளிநாடுகளில் இருந்து நீர்ம எரிவாயுக்களை இறக்கும் தளங்களில் இருந்தே, குழாய்கள் வழியாக வீடுகளுக்குக் கொண்டு செல்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது போன்ற பணிகள் நடைபெறுகின்றன.
இந்தப் பணிகளுக்காக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூபாய் இரண்டு லட்சம் கோடி செலவிடப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
2006 ஆம் ஆண்டு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம், நகரங்களில் பொது வழங்கலுக்கான கட்டமைப்புகளை ஆக்குவதற்கும், நாடு முழுமையும் எரிவாயு குழாய்களை ஒருங்கிணைப்பதற்குமான பணிகளைச் செய்து வருகின்றது. இயற்கை எரிவாயு கிடைக்கின்ற புதிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றை வெளிக்கொணர்வதற்கான பணிகளை மேற்கொள்கின்றது.
இதுவரையிலும், 27 மாநிலங்கள், மற்றும் மத்திய அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகளில் 230 நிலப்பகுதிகளில் உள்ள 400 மாவட்டங்களுக்கான, நகரங்களுக்கான வழங்கலுக்காக, 10 முறை ஏலச்சுற்றுகள் நடத்தப்பட்டு இருக்கின்றன" என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.