மகளின் இறுதி நீதிக்காகப் போராடி வரலாற்றில் முக்கிய இடத்தை அடைந்துள்ளார் நிர்பயாவின் தாயார்: கிரண்பேடி பாராட்டு

கிரண்பேடி - நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி: கோப்புப்படம்
கிரண்பேடி - நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி: கோப்புப்படம்
Updated on
1 min read

தனது மகளின் இறுதி நீதிக்காகப் போராடி இரக்கமற்ற குற்றவாளிகளை அம்பலப்படுத்தியவர் நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்குத் தூக்கு தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி குற்றவாளிகள் 4 பேரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு, சீராய்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றவாளிகள் 4 பேரும் தனித்தனியாக தாக்கல் செய்த கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

இவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஜனவரி 22, பிப்ரவரி 1, மார்ச் 3 ஆகிய தேதிகளில் 'டெத் வாரண்ட்' பிறப்பிக்கப்பட்டும் தள்ளிப்போனது. இறுதியாக, இன்று (மார்ச் 20) தண்டனையை நிறைவேற்ற 4-வது முறையாக 'டெத் வாரண்ட்'டை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்து அதிகாலை 5.30 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டது.

அதன்படி, திஹார் சிறையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை திட்டமிட்டபடி நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகளின் உடலைப் பரிசோதித்த மருத்துவர் உடலில் இருந்து உயிர் பிரிந்துவிட்டதை உறுதி செய்து அறிவித்தார்.

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப் மூலமாகப் பகிர்கையில், "நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி தனது மகளின் இறுதி நீதிக்காகப் போராடி வரலாற்றில் முக்கிய இடத்தை அடைந்துள்ளார். மிருகத்தனமான மற்றும் இரக்கமற்ற குற்றவாளிகளின் முரண்பாட்டை அவரது போராட்டம் முழுமையாக அம்பலப்படுத்தியது" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in