

வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சாலை மார்க்கமாக வாகனங்களில் வருவோர் மூலம் கரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள், சாலைகளைப் பயன்படுத்த சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் செலுத்த கார்கள், கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் சில நிமிடங்கள் நின்று வழிநெடுகிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துகின்றனர்.
சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாகன ஓட்டிகள் பேசுவார்கள். அந்த நேரத்தில் இருமல், தும்மல் மூலம் ஊழியர்களுக்கும், அங்கு வாகனங்களில் காத்திருப்போருக்கும் கரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. அதனால், கரோனா அச்சம் அடங்கும் வரையும், பரவுவதைத் தடுக்கும் வரை சுங்கச்சாவடிகளை தற்காலிகமாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:
சுங்கச்சாவடிகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கின்றன. அவர்களில் வடமாநிலங்களில் இருந்து வருவோர் அதிகம். தற்போது முழுக்க முழுக்க விமானநிலையங்களில் இருந்து வரும் வெளிநாட்டினரை மட்டுமே குறி வைத்துப் பரிசோதனை நடக்கிறது. ஏற்கெனவே வெளிநாட்டிலிருந்து வந்தோர் மூலம் உள்நாட்டில் உள்ளோருக்கு பரவியிருக்கலாம்.
எனவே, அவ்வாறு பாதிக்கப்பட்டோர் சுங்கச் சாவடிகள் வழியாக வாகனங்களில் கடக்க வாய்ப்புள்ளது.
அதனால், தற்காலிகமாகச் சுங்கச்சாவடிகளை மூடினால் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம், என்றனர்.