

கரோனா வைரஸ் அறிகுறிகளுடன்8 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில், மகளிர் திட்டம்வாயிலாக முகக்கவசம் உற்பத்தி செய்யும் பணிகளை, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும்போது கை கால்களை சோப்பு கொண்டு நன்றாக சுத்தம் செய்தபின் வீட்டுக்குள் செல்ல வேண்டும்.
குறைந்த விலை முகக்கவசம்
கைகளை சுத்தப்படுத்த உபயோகப்படுத்தப்படும் சோப்பு திரவம், பணகுடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தயாரிக்கப்பட்டு, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் முகக்கவசங்கள் தேவையான அளவு தயார் செய்யப்படுகிறது. தேவைப்படுவோர் மாவட்ட நிர்வாகத்தை அல்லது மகளிர் திட்ட அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் முகக் கவசங்களை இருப்பு வைத்திருக்கவும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அவை கிடைத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து மருந்துக் கடைகளிலும் மருத்துவ குழுக்கள் மூலம் ஆய்வு செய்து, கூடுதல் விலைக்கு முகக்கவசம் விற்போர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் வெளியில் செல்வதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் மட்டும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா அறிகுறிகளுடன் 8 பேர்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி,பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்துள்ள 30 பேர்வீடுகளிலேயே வைத்து தீவிரமாககண்காணிக்கப்பட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்துக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்வதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றார்.