

திருநெல்வேலியில் தண்ணீரில் வேப்பிலை, மஞ்சள் கலந்த இயற்கை கிருமி நாசினியை கடைக்காரர் ஒருவர் பொதுமக்கள் கைகளை கழுவ வைத்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் கைகளை சோப்பு, சுத்தப்படுத்தும் திரவம் கொண்டு பலமுறை சுத்தமாக கழுவ வேண்டும் என்று அரசுத்தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளில் சொல்லப்பட்டு வருகிறது. வெளியே சென்றுவிட்டு வீடுகளுக்கு செல்வோர் கைகளை சோப்பு போட்டு கழுவிய பின்னரே முகத்தை தொட வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இயற்கை கிருமி நாசினி
இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு மத்தியில் திருநெல்வேலி டவுனில் வாகையடிமுனையிலுள்ள ஆப்டிகல்ஸ் கடைமுன் வித்தியாசமாக, தண்ணீரில்வேப்பிலையையும், மஞ்சள் பொடியையும் கலந்து இயற்கை கிருமி நாசினியை வாளிகளில் கடைக்காரர் கே.மீராஷா வைத்திருக்கிறார்.
கடந்த 2 நாட்களாக இந்த இயற்கை கிருமி நாசினியை கொண்டு கை, கால்களை கழுவுவதற்கு அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்கள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள் வருகின்றனர்.
இதுகுறித்து மீராஷா மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் கூறும்போது, ‘‘கரோனா வைரஸ் குறித்த அச்சம்மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. அதைபோக்க வேண்டும். நமது முன்னோர்கள் பாரம்பரியமாக பயன்படுத்திய தண்ணீரில் வேப்பிலையும், மஞ்சளும் கலந்த இயற்கை கிருமி நாசினியை தற்போது மக்கள் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளேன். வெந்நீரில்வேப்பிலையையும், மஞ்சளையும் கலந்து வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று ஒரு சித்த மருத்துவர் தெரிவித்ததால் அதன்படி இயற்கை கிருமி நாசினியை தயாரித்து வைத்திருக்கிறேன். இதுபோல் ஒவ்வொரு கடைக் காரர்களும் வைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.
சித்த மருத்துவர் கருத்து
கிராமப்புறங்களில் வீடுகளுக்குள் நுழையும் முன் தொட்டியில் நிரப்பப்பட்டுள்ள தண்ணீரில் கை, கால்களை கழுவிவிட்டு செல்லும் பழக்கம் முன்னர் இருந்தது. பாரம்பரிய மருத்துவமுறையில் வேப்பிலை, மஞ்சள் கலந்த இந்த இயற்கை கிருமி நாசினியை பயன்படுத்துவதால் நல்ல பலன் ஏற்படும். இதன்மூலம் கரோனா வைரஸ் கிருமி அழிக்கப்படும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என்றாலும் இந்த எளிய வழியை பின்பற்றுவதில் தவறில்லை. சானிடைசர்களை அனைவரும் வாங்கி பயன்படுத்தும் நிலை தற்போது இல்லை. இந்நிலையில் இந்த எளிய கிருமி நாசினியை பயன்படுத்தலாம் என்று பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.