Published : 20 Mar 2020 08:27 AM
Last Updated : 20 Mar 2020 08:27 AM

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து இரும்பு செயினால் தாக்கிய நபர் கைது

திருப்பூர்

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று காலை ஒருவர் வந்தார். நுழைவு வாயில் முன்பு நிறுத்தியிருந்த புள்ளியியல் துறையின் உதவி இயக்குநர் வாகனம் மற்றும் வரவேற்பறையின் கண்ணாடியை இரும்பு செயினால் தாக்கினார்.

இதில் கண்ணாடிகள் உடைந்துசேதமடைந்தன. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாநகர ஆயுதப்படை காவலர் சாந்தி(25) தடுத்து நிறுத்த முயன்றார். அவரையும் அந்த நபர் இரும்பு செயினால் தாக்கினார்.

சத்தம் கேட்டு, ஆட்சியர் அலுவலகஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் திரண்டனர். திடீரென ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பிரதானக் கதவை அந்த நபர் உள்பக்கமாக பூட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த வீரபாண்டி போலீஸார் மற்றும் ஊழியர்கள், பின்பக்க கதவு வழியாக உள்ளே சென்று அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். போலீஸார் அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இது தொடர்பாக வீரபாண்டி போலீஸார் கூறும்போது, ‘பிடிபட்டவர் பெயர் இளங்கோ(40). பெருமாநல்லூர் அருகே கருணாம்பதியை சேர்ந்தவர். 3-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.எலக்ட்ரான்மூலக்கூறுகள் கண்டுபிடித்துள்ள தாகவும், மனிதன் இளமையாக இருக்க மூலக்கூறு தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மூலக்கூறு தொடர்பான அறிவை திருட சிலர் முயற்சிப்பதாகவும், இதனால் வீட்டை விட்டு 4 ஆண்டுகளுக்குமுன்பு வெளியே வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கண்டு பிடிப்பை குடியரசுத்தலைவர், இந்திய விமானப்படை தலைவருக்கும் அனுப்பி வைத்துள் ளேன். இதனை யாரும் மதிக்காததால், நியாயம் கேட்டு இப்படிநடந்து கொண்டதாக தெரிவித்தார்’ என்றனர்.

வீரபாண்டி கிராம நிர்வாக அலுவலர் நீலகண்டன் அளித்த புகாரின் பேரில், இளங்கோ மீது ஆட்சியர் அலுவலகத்துக்குள் அத்துமீறி உள்ளே நுழைதல், பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் மீது தாக்குதல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x