

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில், சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற கார், லாரியின் பின்னால் மோதி விபத்துக்குஉள்ளானதில், 5 கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் எடுத்தானூர் பகுதியை சேர்ந்தவர் கே.வெங்கடாசலம்(21). இவரது நண்பர்கள் சங்கராபுரம் ஆலத்தூர் ஆர்.ராஜேஷ்குமார் (20), கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் எஸ்.ஜெயசூர்யா (21), சின்னசேலம் இளவரசன் (21), சேலம் வசந்த் (21), கார்த்திக் (23), தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சி.சந்தோஷ் (22). சேலத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவர்கள், தேர்வு விடுமுறையை முன்னிட்டு உதகைக்கு காரில் புறப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த மணிகண்டன் (28) என்பவர் காரை இயக்கினார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி நல்லிக்கவுண்டன்பாளையம் பவர்ஹவுஸ் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சிமென்ட் லோடு ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், லாரியின் பின்புறத்தில் சிக்கிய கார் உருக்குலைந்தது. காரில் இருந்த ஓட்டுநர் மணிகண்டன், இளவரசன், ராஜேஷ்குமார், வெங்கடாசலம், வசந்த் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
அவிநாசி போலீஸார் மற்றும் மக்கள், ஜெயசூர்யா, கார்த்திக், சந்தோஷ் ஆகியோரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் ஜெயசூர்யா உயிரிழந்தார். சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் கே.விஜயகார்த்திகேயன், காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் ஆகியோர் பார்வையிட்டனர். அவிநாசி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.