Published : 20 Mar 2020 07:06 AM
Last Updated : 20 Mar 2020 07:06 AM

தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் கோடியில் மின்நிலையங்கள்: சென்னையில் ரூ.4,300 கோடியில் ஸ்மார்ட் மீட்டர்கள்

சென்னையில் 42 லட்சம் மின்நுகர்வோருக்கு ரூ.4,300 கோடியில்ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.2 ஆயிரம் கோடியில் புதிதாக 22 மின்நிலையங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி நேற்று 110 விதியின் கீழ் தெரிவித்ததாவது:

வருவாயைப் பெருக்கவும், மின்நுகர்வோருக்கு நிறைவான சேவையை வழங்கவும், தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளை குறைக்கவும் தமிழகம் முழுவதும்வினைதிறன்மிகு மின் அளவிகள்(ஸ்மார்ட் மீட்டர்கள்) பொருத்தப்பட உள்ளன. முதலில் சென்னைமாநகரில் 42 லட்சம் மின் நுகர்வோருக்கு ரூ.4,300 கோடியில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. மற்ற மாவட்டங்களில் இத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

பெருகிவரும் மின்சுமையை ஈடுசெய்யும் நோக்கில், மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் 230 கி.வோ. துணை மின்நிலையம் 400 கி.வோ. மின் நிலையமாகவும், கோவை இருகூர், மதுரைதிருப்பாலையில் உள்ள 110 கி.வோ.துணை மின்நிலையங்கள், 230கி.வோ. துணை மின்நிலையங் களாகவும் தரம் உயர்த்தப்படும். சிவகங்கை மாவட்டம் அரசனூரில் புதிதாக 230 கி.வோ. துணை மின்நிலையம் அமைக்கப்படும்.

தடையில்லா மின்சாரம்

இதுதவிர, மின்நுகர்வோருக்கு தடையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் 110 கி.வோ. திறனில் 22 மின்நிலையங்கள் அமைக்கப்படும். இப்பணிகள் ரூ.1,998கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

இயற்கை சீற்றங்களின்போது கடலோர மாவட்டங்களில் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்யும் விதமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 33 கி.வோ. துணை மின்நிலையங்களுக்கு மின்சாரம் கொண்டுசெல்லும் மின் பாதைகளில் சுமார் 200 கி.மீ. நீள பாதை ரூ.300 கோடியில் புதைவடங்களாக மாற்றப்படும்.

மின் பகிர்மான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த 23 இடங்களில் புதிய 33/11 கி.வோ. துணைமின்நிலையங்கள் அமைக்கப்படும். செயல்பாட்டில் இருக்கும் 33/11 கி.வோ. மின்நிலையங்களில் உள்ள 13 மின் மாற்றிகள் கூடுதலாகவோ, திறன் உயர்த்தியோ அமைக்கப்படும். இப்பணிகள் ரூ.187 கோடியில் மேற்கொள்ளப் படும்.

இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x