

பட்டுக்குப் புகழ்பெற்ற காஞ்சிபுரத் தில் கரோனா அச்சம் காரணமாக பட்டுச் சேலைகள் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் தினமும் ரூ.5 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக பட்டுச் சேலை வியாபாரிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பட்டுச் சேலை வாங்க காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 22 பட்டு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பல்வேறு தனியார் பட்டுகடைகள் மூலம் தினமும் ரூ.10 கோடி அளவுக்கு பட்டுச் சேலைகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
ரூ.5 கோடியாக சரிவு
ஆனால், கரோனா அச்சம் காரணாக கடந்த ஒரு வாரமாகவே சுற்றுலாப் பயணிகள் காஞ்சிபுரம் பகுதிக்கு வரவில்லை. இதனால் பட்டுச் சேலை விற்பனை சரிந்துள்ளது. தற்போது மார்ச் 31-ம் தேதிவரை வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று பல்வேறுமாநில அரசுகள் அறிவித்துள்ளதால் பிற மாநில வியாபாரிகளும் பட்டுச் சேலைகள் வாங்க வரவில்லை.
இதனால் ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட பட்டுச் சேலைகள் அப்படியே தேங்கியுள்ளன. தினந்தோறும் ரூ.5 கோடி அளவுக்கு பட்டுச் சேலை விற்பனை ஆவதேகடினமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெளியூர் வியாபாரிகள்
இதுகுறித்து மேட்டுத் தெரு பகுதியைச் சேர்ந்த பட்டுச் சேலைஉற்பத்தியாளர் ஒருவர் கூறும்போது, ‘‘காஞ்சிபுரத்தில் பட்டுச் சேலை விற்பனையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. வெளியூர் வியாபாரிகள் கடந்த 10 நாட்களாகவே வரவில்லை. அரசு வேறு தற்போது எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. வரும் 31-ம் தேதிவரை இந்த நிலை தொடர வாய்ப்புள்ளது. அதன் பிறகு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை.
நாங்கள் நெசவாளர்களுக்கு தினந்தோறும் சேலை நெய்வதற் கான வாய்ப்புகளை வழங்கி வருகிறோம்.
ஏற்கெனவே உற்பத்தி ஆனசேலைகளே விற்காத நிலையில் புதிதாக உற்பத்தி செய்து பயனில்லை. இதனால் நாங்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தஉள்ளோம். இதன்மூலம் நெசவாளர்களும் பாதிக்கப்படுவார்கள்’’ என்றார்.