Published : 22 Aug 2015 08:13 AM
Last Updated : 22 Aug 2015 08:13 AM

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் தமிழகம் முன்னணி: சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெருமிதம்

உடல் உறுப்பு தானத்தில் இந்தியா வில் தமிழகம் முன்னிலையில் திகழ்கிறது என்று தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.

சென்னை அப்போலோ மருத் துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார தொடக்க நிகழ்ச்சி மற்றும் உறுப்பு தான கொடையாளிகளின் குடும்பத்தினரை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறிய தாவது:

உடல் உறுப்பு தானம் என்பது சாதாரண நிகழ்வல்ல, உறுப்பு தானம் செய்வோர், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள இருக்கிற மருத்துவர்கள், உரிய நேரத்தில் உறுப்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு வர தேவையான போக்குவரத்து வசதியை செய்துகொடுக்கிற காவல்துறையினர் என பல தரப்பட்டவர்களின் ஒருங்கிணைப்பு இதில் அடங்கியுள்ளது.

தங்கள் உறவுகளை இழந்த வேதனையான ஒரு சூழலில் அவர்களின் உடல் உறுப்புகளை மற்றவர்களுக்காக தானம் கொடுக்க முன்வருகிறார்களே அவர்கள் மிகவும் பாராட்டுக்கு உரியவர்கள்.

இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னணியில் உள்ளது. தேசிய அளவைக் காட்டிலும் தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் 4 மடங்கு அதிகமாகும். உடல் உறுப்பு தானத்தில் உலக அளவில் முத லிடத்தில் இருக்கும் ஜெர்மனியை அடுத்து சென்னை 2-ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 700 கொடையாளிகளிடமிருந்து 3,769 பேருக்கு உறுப்பு தானம் அளிக் கப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சை அளிப்பதில் இந்தியாவில் தமிழகம் மருத்துவ தலைநகராக விளங்குகிறது. உயர்தரமான சிகிச்சை அளிக்கக் கூடிய அரசு மருத்துவமனைகள் இங்கு உள்ளன. அதேபோல், தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து ஏழைகளுக்கு காப்பீட்டுத் திட்டம் மூலமாக இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல் உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்துக்கென பிரத்யேக தொகுப்பு நிதி உருவாக்கப்பட்டு அதன்மூலமாக ஏழைகளுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சைக்கு உரிய நிதியுதவி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

உறுப்பு தானம் வழங்கியவர் களின் குடும்பத்தினரும், உறுப்பு மாற்று சிகிச்சை செய்த மருத் துவர்களும் பணியாளர்களும் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி.ரெட்டி, நிர் வாக துணைத்தலைவர் ப்ரீதா ரெட்டி ஆகியோர் உறுப்பு தான கொடையாளிகளின் குடும்பத்தின ரைப் பாராட்டிப் பேசினர்.

நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, “தற்போது உறுப்பு மாற்று சிகிச்சை வசதி சென்னை, கோவை, மதுரை அரசு மருத்துவ மனைகளில் உள்ளது. தஞ்சாவூர், சேலம் அரசு மருத்துவமனைகளி லும் இவ்வசதி ஏற்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து, மாவட்ட அள விலான மருத்துவமனைகளுக்கும் இவ்வசதியை விரிவுபடுத்தப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x