

கோழி இறைச்சியால் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என உணர்த்த இலவசமாக சிக்கன் 65 விநியோகம் புதுச்சேரியில் இன்று நடந்தது.
புதுச்சேரி சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் நசீர் அகமது. இவர் இப்பகுதியில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனையைச் செய்து வருகிறார். தற்போது கோழி இறைச்சியால் கரோனோ வைரஸ் நோய் பரவும் என்ற தவறான செய்தி பரப்பப்படுவதை உடைக்க நூதன முயற்சியைக் கையில் எடுத்தார். மாலையில் சிக்கன் 65 செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கத் தொடங்கினார். இதனால் அவ்வழியே சென்ற பலரும் போட்டி போட்டு வாங்கி சாப்பிடத் தொடங்கினர்.
அதே வேளையில் முட்டையும் குறைந்த விலையில் விற்கத் தொடங்கினார். 30 முட்டைகள் கொண்ட ஒரு அட்டை ரூ.50க்கு விற்கப்பட்டது. அதேபோல் கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ. 70க்கும், உயிர் கோழி ரூ.50க்கும் விற்றார். சிக்கன் 65 சாப்பிட்டு இறைச்சியையும், முட்டையும் பலரும் வாங்கிச் சென்றனர்.
இது தொடர்பாக நசீர் அகமதுவிடம் கேட்டதற்கு, "கோழி இறைச்சி, முட்டை தொடர்பாக பல தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. இறைச்சியால் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாது என்பதை உணர்த்த இலவசமாக சிக்கன் 65 விநியோகம் செய்தேன். அதேபோல் முட்டை அதிக அளவில் நாமக்கலில் தேங்கியுள்ளது. அதனால் குறைந்த விலையில் முட்டைகளை விநியோகித்தேன். இறைச்சி, முட்டையால் வைரஸ் தொற்று வராது என்பதற்காகவே இம்முயற்சி" என்று குறிப்பிட்டார்.