

திருச்சி ஆவின் சேர்மன் பதவிக்கு மீண்டும் கார்த்திகேயனை நியமிக்க வேண்டாம் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் குமாரும் தலையால் தண்ணீர் குடித்தார்கள். அதிமுக எம்பி-யான வைத்திலிங்கம் வீட்டு திருமணத்துக்காக தஞ்சை செல்லும் வழியில் திருச்சிக்கு வந்த முதல்வரிடம், “உங்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு கட்சிக்குள் கார்த்திகேயன் செய்யும் அத்துமீறல்களைத் தாங்க முடியவில்லை. அதனால், ஆவின் சேர்மன் பதவிக்கு அவரைத் தவிர்த்து வேறொருவரை நிறுத்துங்கள்” என்று குமாரும் வெல்லமண்டியும் கோரிக்கை வைத்தார்களாம்.
முதல்வரும், “நீங்களே வேறொரு ஆளைச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு தஞ்சை சென்றாராம். ஆனால், மதியம் மீண்டும் திருச்சிக்கு வந்த முதல்வர், “இனிமே அந்தப் பையன் கட்சி விவகாரங்கள்ல தலையிட மாட்டார். அதனால அவரே ஆவின் சேர்மனுக்கு நின்னுட்டுப் போகட்டும். தட்டமுடியாமத்தான் இத உங்ககிட்ட சொல்றேன்” என்று மீண்டும் கார்த்திகேயனுக்கே கொடியசைத்து விட்டாராம். இதையடுத்து, மீண்டும் கார்த்திகேயனே போட்டியின்றி ஆவின் சேர்மனாகியிருக்கிறார்.
- காமதேனு இதழிலிருந்து (மார்ச் 22, 2020)