

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல நாளை (மார்ச் 20) முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆகமவிதிப்படி அனைத்து பூஜைகளும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர்.
கரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களாக பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் வருகைதர தடைவிதித்துள்ளது.
இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு பேரிடர் என்று அறிவிக்கப்பட்டு தமிழக அரசால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாதுகாப்பு முன்னேற்பாடுகளின் தொடர் நடவடிக்கையாகவும், பக்தர்களின் நலன்கருதியும் திருக்கோயில் பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்ய அனுமதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.
பழநி தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் ஆகமவிதிகளுக்குட்பட்டு சுவாமிக்கு நடைபெறும் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் கோயில்களில் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பழநி தண்டாயுதபாணி மலைக் கோயிலில் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய கோயில்களிலும் நாளை முதல் பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை யையொட்டி ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் வரும் மார்ச் 31-ம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோயிலில் ஆகமவிதிப்படி பூஜைகள் நடைபெறும் என திருக்கோயில் இணை ஆனையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் கோயிலிலும் தடை..
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மார்ச் 20 முதல் 31-ம் தேதி வரை சாமி தரிசனம் செய்திட பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு தரிசனம் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மார்ச் 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் கோயிலில் ஆகம விதிகளுக்குட்பட்ட பூஜைகள் அனைத்தும் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.