Published : 19 Mar 2020 07:57 PM
Last Updated : 19 Mar 2020 07:57 PM

தமிழகத்தில் 144 தடை இல்லை; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: டிஜிபி திரிபாதி எச்சரிக்கை 

தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இதையடுத்து 144 தடை உத்தரவு மாநிலமெங்கும் போடப்பட உள்ளது என விஷமிகள் வதந்தி பரப்பி வருகின்றனர். இந்நிலையில் இதை மறுத்துள்ள காவல்துறை டிஜிபி திரிபாதி, வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக அரசு. பலமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், சுற்றுலாத் தளங்களை மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. நோய் தாக்கம் உள்ளதாக சந்தேகப்படுபவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் பீதியடையா வண்ணம் அதே நேரம் நோய்த் தொற்றும் பரவாமல் இருக்க பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

ரயில் பயணங்களை முற்றிலும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு 80 சதவீதப் பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாட உள்ளார் என்ற செய்தி வெளியானது. பிரதமர் முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளார். நாடெங்கும் 144 தடை உத்தரவு அமலாகப்போகிறது என்று வாட்ஸ் அப் சமூக வலைதளங்களில் பலரும் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

இதுபற்றி நிலவரம் அறிய தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபி திரிபாதியைச் செய்தியாளர்கள் தொடர்புகொண்டனர். ''அவ்வாறு எந்த உத்தரவும் இடும் நோக்கமில்லை. 144 தடை உத்தரவு என்பது இல்லை. இது தொடர்பாக யாராவது வதந்தி பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வதந்தி பரப்பும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள்'' என்று டிஜிபி திரிபாதி எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x