Published : 19 Mar 2020 06:35 PM
Last Updated : 19 Mar 2020 06:35 PM

அனைத்து தேர்வுகளையும் மார்ச் 31-ம் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும்; மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மாநிலங்களுக்கு உத்தரவு: தமிழகத்தில் தேர்வுகள் தள்ளிவைப்பு?

கோவிட்-19 எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தேர்வுகளையும் மார்ச் 31-ம் தேதி வரை ஒத்திவைக்க அனைத்து மாநிலங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

“நோவல் கரோனா வைரஸ் (கோவிட்-19) பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மனிதவள அமைச்சகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி, தேசிய பரிசோதனை முகமை, தேசிய திறந்த நிலைக் கல்வி நிறுவனம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், தேசிய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஆகியவை தங்களது அனைத்து தேர்வுகளையும் இம்மாதம் 31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பல்வேறு தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பாதுகாப்பை மட்டுமல்லாமல், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மனிதவள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் மற்றும் தேர்வு வாரியங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தற்போது நடந்து வரும் தேர்வுகளை, மார்ச் 31-ம் தேதிக்குப் பின்னர் மாற்றியமைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வுத் தாள்கள் திருத்தும் பணியையும் மார்ச்-31-ம் தேதிக்குப் பின்னர் மேற்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் மற்றும் தேர்வு வாரியங்கள் மின்னணு தொடர்பு சாதனங்கள் மூலம் அவ்வப்போது தொடர்பு கொண்டு முறையான தகவல்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இது தொடர்பாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கேட்டுக் கொண்டுள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கல்வித் திட்டத்தை முறைப்படி பராமரிக்கவும், அனைத்து இயன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x