Published : 19 Mar 2020 05:25 PM
Last Updated : 19 Mar 2020 05:25 PM

தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா: மத்திய அமைச்சரிடம் கனிமொழி நேரில் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரை நேரடியாகச் சந்தித்து வலியுறுத்தினார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலைச் சந்தித்த கனிமொழி கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்திக் கடிதம் ஒன்றை வழங்கினார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

“எனது தொகுதியான தூத்துக்குடியில் இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களின் ஊழியர்கள் கோரிக்கையான, தூத்துக்குடியில் மத்திய அரசுப் பாடத்திட்ட பள்ளியான கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும் என்பதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

எனது தொகுதியில் சுங்கத்துறை, நெய்வேலி அனல் மின் கழகம், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, கடலோர காவல்படை, சிர்கோனியம் காம்ப்ளக்ஸ், அணுமின் கழகத்துக்கு உட்பட்ட கனநீர் ஆலை ( ஹெவி வாட்டர் பிளான்ட்), துறைமுகம் என மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன.

இந்நிறுவனங்களின் அலுவலர்கள் தங்கள் குழந்தைகளை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சேர்க்கத் தயாராக இருக்கிறார்கள். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் கேந்திரிய வித்யாலாயா சங்கேதனுக்கு கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி எழுதிய கடிதத்தில், தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலாயா பள்ளி அமைப்பதற்கான நிலம், உள்கட்டமைப்பு வசதிகள் ரீதியாக தாங்கள் உதவத் தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்திருக்கிறது.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுடைய குழந்தைகள் இந்தப் பள்ளியால் பயன்பெறுவார்கள் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவ, தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலாயா அமைப்பது குறித்து விரைவில் பரிசீலித்து நல்ல முடிவெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி மத்திய அமைச்சரைச் சந்தித்தபோது அமைச்சர் தான் எழுதிய இரண்டு புத்தகங்களை கனிமொழிக்கு அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x