

கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகளை கருத்தில்கொண்டு அனைத்து வகை வங்கிக் கடன் தவணைகளையும் 76 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் தாக்கத்தால் பல்வேறு சிறு தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், வேலையிழப்பு, தொழில் இழப்பு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால், பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தக் காலத்தில் ஏற்படும் வருவாய் இழப்புகளை கருத்தில்கொண்டு வங்கிக் கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மார்ச் 19) தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகளை கருத்தில்கொண்டு அனைத்து வகை வங்கிக் கடன் தவணைகளையும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். இந்தக் காலத்திற்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இது தொடர்பாக, பொதுத்துறை வங்கி அதிகாரிகளை தமிழக முதல்வர் அழைத்துப் பேச வேண்டும்!
கேரளத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வங்கி அதிகாரிகளை அழைத்துப் பேசியுள்ளார். அவர்களும் சாதகமாகப் பதிலளித்துள்ளனர். அவரது நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதேபோல் தமிழக முதல்வரும் செய்து அடித்தட்டு மக்களுக்கு உதவ வேண்டும்" என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.