

கரோனா குறித்த தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரஜினி பாராட்டு தெரிவித்துள்ளார். அதே நேரம் கரோனா பாதிப்பு ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவித்தொகை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. வழக்கமான ரயில்கள் ஓடுகின்றன. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தீவிரமாகக் கண்காணித்து வரும் அரசு, தற்போது வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களையும் தீவிரமாகக் கண்காணிக்கிறது.
பாதிக்கப்பட்ட மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளாவிலிருந்து வரக்கூடியவர்களை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 89 ஆயிரத்து 750 பேர் பரிசோதனைக்கு ஆளாகியுள்ளனர். 2,984 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
இது தவிர பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் மூடல், பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவதைத் தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது.
தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையைப் பாராட்டியுள்ளார். அதே நேரம் கரோனாவால் பாதிக்கப்படும் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு உதவ வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவு:
“தமிழகத்தில் கரோனா வைரஸ் தொடர்பாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தமிழகத்தின் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்துக்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால் அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்”.
இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.