Published : 19 Mar 2020 02:52 PM
Last Updated : 19 Mar 2020 02:52 PM

70 ஆண்டுகளாக தமிழகத்தைப் புறக்கணிக்கும் ரயில்வே துறை: மாநிலங்களவையில் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

திட்டங்களை ரயில்வே வாரியம் அனுமதித்திருந்தும் நிதி ஒதுக்காமல் தமிழகத்தை மட்டும் ரயில்வே துறை புறப்பணிப்பது ஏன்?. 70 ஆண்டுகளாக ரயில்வே துறை தமிழகத்தைப் புறக்கணிக்கிறது என்று ஆர்.எஸ்.பாரதி எம்.பி. குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து ஆர்.எஸ். பாரதி, இன்று (மார்ச் 19) மாநிலங்களவையில் பேசியதாவது:

"தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டுமல்ல, கடந்த 70 ஆண்டுகளாக. ஆர்.கே.சண்முகம் செட்டியார் முதல் நிர்மலா சீதாராமன் வரை இந்த நாட்டுக்கு ஆறு நிதி அமைச்சர்களை நாங்கள் வழங்கியிருந்தாலும், காரணம் எனக்குத் தெரியவில்லை.

கடந்த 70 ஆண்டுகளாக, ஒரு ரயில்வே அமைச்சர் கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதற்கு இதுவே காரணம் என்று நான் நினைக்கிறேன். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள், எதுவும் தமிழகத்தில் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, மறைந்த தலைவர் கருணாநிதியின் வேண்டுகோளின் பேரில், அப்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி சென்னை, ஐசிஎப்-ல் ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலையின் இரண்டாவது யூனிட் தொடங்கிட அனுமதி அளித்தார். ஏற்கெனவே ஒன்பது ஆண்டுகளாகியும் இன்று வரை அந்த யூனிட் தொடங்கப்படாமல், தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதுபோல், பல திட்டங்கள் உள்ளன.

உதாரணமாக, 2009 ஆம் ஆண்டில், ரயில்வே வாரியம் ஆவடியிலிருந்து கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்புதூர் வழியாக ஒரு ரயில் பாதை திட்டத்திற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அனுமதி அளித்தது. இது ஒரு தொழில் துறை மையமாக உள்ளது, இது தெற்கிலிருக்கும் நிலையங்களை இணைக்கிறது. வாரியம் அனுமதி அளித்திருந்தாலும், நிதி ஒதுக்கப்படாததற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை.

அதேபோல், எம்ஆர்டிஎஸ் ரயில்வேயில், ஏற்கெனவே வேளச்சேரி வரை பணிகள் நிறைவடைந்துள்ளன. செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் வேளச்சேரி இடையே 500 மீட்டர் தூரப் பணிகள் மட்டுமே முடிக்க வேண்டியுள்ளது. இது 2019 டிசம்பர் மாதத்தில் திறக்கப்படும் என்று ஏற்கெனவே ஒரு அறிவிப்பை வெளியிட்டது ரயில்வே வாரியம். ஆனால், அது இன்று வரை நிறைவேற்றப்படவல்லை.

தாம்பரத்திலிருந்து வேளச்சேரியை இணைப்பதன் மூலம் இடையில் உள்ள நங்கநல்லூர், தில்லை கங்கா நகர், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் மக்கள் பயனடைவார்கள். மேலும், இந்தப் பகுதிகளில் ஐடி கேரிடார் நிறுவனங்கள் பல உள்ளன.

எனவே, ரயில்வே அமைச்சர் இங்கு இருப்பதால், அவரிடம் நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், வேளச்சேரி முதல் வாணுவம் பேட்டை வரையிலான முழுப் பணிகளும் முடிந்துவிட்டதால், இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான திட்டத்தைத் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது 2019 டிசம்பரில் திறக்கப்படும் என்று நீங்கள் ஏற்கெனவே கூறியிருந்தீர்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதேபோல், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் நகரம் வரை எந்த நிலையங்களிலும் கழிப்பறைகள் பராமரிக்கப்படுவதில்லை. நாங்கள் பல வைரஸ் நோய்களைப் பற்றி பேசுகிறோம். ஒரு வைரஸ் நோய் ரயில் நிலையங்களிலிருந்து மட்டுமே வெளிப்படுகிறது.

எனவே, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நிலையம் வரை நவீன கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும், பழவந்தாங்கல், பல்லாவரம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்கள் வழங்கப்பட வேண்டும்".

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பேசினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x