

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள், கல்லூரித் தேர்வுகள், விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி வைக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்வு தொடர்பான அனைத்துப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் கீழ் மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் அரசுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. பொதுமக்கள் பயணங்களைத் தவிர்க்குமாறும், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா செல்வதைத் தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் ஆட்கள் ஒன்றுகூடுவதற்குத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் பல்கலைகழகங்களுக்கு விடுமுறை விடப்பட்டாலும், பல்கலைக்கழகங்களில் நடக்கும் செய்முறைத்தேர்வு, தேர்வுகள், பல்கலைக்கழகங்களுக்கு கீழ் வரும் கல்லூரிகளில் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்ததால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் விடுதியிலேயே தங்கியிருக்கும் நிலை உருவாகியிருந்தது.
இந்நிலையில் இன்று பல்கலைக்கழகங்களுக்கான உயரிய அமைப்பான யுஜிசி நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களுக்கான தேர்வை மார்ச் 31-ம் தேதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ளது. இதுதவிர பல்கலைக்கழகங்களுக்கு கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கும் அதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடர்பான அனைத்துப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.