

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது தன்னை உற்சாகப்படுத்தியதாக, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 19) கூட்டுறவுத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் நிலையில், முன்னதாக அத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜெயலலிதா உடனான நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அப்போது, அமைச்சர் செல்லூர் ராஜூ கண் கலங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, "இன்று சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. மானியக் கோரிக்கையில் நான் கலந்துகொண்டு பேசுகிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தத் துறையை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னிடம் வழங்கி, இது ஏழை, எளிய மக்களுக்கு உதவும் துறை. அதனை உங்களிடம் நம்பிக் கொடுக்கிறேன். சிறப்பாகச் செயல்பட வேண்டும் எனக் கூறினார்.
முதன்முறையாக நான் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தியபோது என்னை ஜெயலலிதா பாராட்டி உற்சாகப்படுத்தியது இன்றும் நினைவில் நிற்கிறது. 10 ஆண்டுகள் இந்தத் துறையில் தொடர்ந்து நான் இருக்கிறேன். 10-வது முறையாக இத்துறை மீதான விவாதத்தில் பேசவிருக்கிறேன். அதனால், 10-வது ஆண்டு நிறைவாக ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆசி பெற்றேன்.
அவர் உயிருடன் இருந்தபோது என்னை உற்சாகப்படுத்தினார். என் பேச்சை ஆமோதிக்கும் வகையில் பேசுவார். அவையெல்லாம் இன்று நினைவாக இருக்கிறது. இந்த மலரும் நினைவுகளை மிகவும் 'மிஸ்' செய்கிறேன். அவர் உயிருடன் இருப்பதாக நினைத்துக்கொள்கிறேன். அவர் சொன்ன வார்த்தையிலிருந்து கடுகளவும் மாறாமல் இந்தத் துறையை வழிநடத்தியிருக்கிறேன்" என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.