

திருப்பத்தூர் அருகே உயிருடன் பிராய்லர் கோழிகளை ஏரியில் மர்ம நபர்கள் விட்டுச்சென்றனர்.
கரோனா வைரஸ் தொற்று மற்றும் பறவை காய்ச்சல் அச்சத்தால் கறிக்கோழி விலை பாதியாக குறைந்துள்ளது. அதேபோல், கோழி முட்டை விலையும் சரிந்துள்ளதால் கோழிப் பண்ணை உரிமையாளர்கள், கறிக்கோழி வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை எதிர்க்கொண்டு வருகின்றனர். கறிக்கோழி விலை குறைந்தாலும், அதை வாங்கி சாப்பிட மக்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோழி வளர்ப்பில் போதிய லாபம் கிடைக்காததால் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் திருப்பத்தூர் அருகேயுள்ள ஏரி ஒன்றில் உயிருடன் பிராய்லர் கோழிகளை விட்டுச்சென்றுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி யுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உயிருடன் கோழிகளை விட்டுச்சென்றுள்ளனர். காலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஏரியில் பிராய்லர் கோழிகள் சுற்றித்திரிவதை கண்டு ஆச்சரியப்பட்டனர். ஆனால், கோழிகளுக்கு யாரும் உரிமை கொண்டாட வரவில்லை.
கரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோழி விற்பனை சரிந்த காரணத்தால் யாரோ பண்ணை உரிமையாளர்கள் தான் வேறு வழியில்லாமல் கோழிகளை ஏரியில் விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என்ற தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது.
இதையடுத்து உற்சாகமான சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஏரியில் திரண்டு கோழிகளை பிடித்துச் சென்றனர். கிட்டத்தட்ட 80-க்கும் மேற்பட்ட கோழிகளை பொதுமக்கள் பிடித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.