

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்துத் துறை சார்பில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கோவையில் இருந்து தினந்தோறும் வெளிமாநிலங்கள், மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் மூலம் கரோனாவைரஸ் பரவுவதைத் தவிர்க்கும் நோக்கில் போக்குவரத்துத் துறை சார்பில் நேற்று 120 ஆம்னி பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோவை (மைய) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் கூறியதாவது: கோவை (மேற்கு), தெற்கு, வடக்கு, மைய வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி சார்பில் கோவையில் இருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளின் கைப்பிடி, பொருட்கள் வைக்கும் பகுதி, இருக்கை தடுப்புகள் ஆகியவற்றில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
தினமும் இந்தப் பணியை மேற்கொள்ள பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். குளிர் சாதன வசதி உள்ள ஆம்னி பேருந்துகளில் பக்கவாட்டுத் திரையும், இருக்கைகள் மீதான துணி உறை மற்றும் போர்வையும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. முன்பதிவு செய்யும் பயணிகளே, போர்வையை எடுத்துவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பு குறையும் வரை இந்த நடவடிக்கை தொடரும், என்றார்.