Published : 19 Mar 2020 08:36 AM
Last Updated : 19 Mar 2020 08:36 AM

ஆவடியில் ரூ.5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட குழந்தை 8 மணி நேரத்தில் மீட்பு: வடமாநில இளைஞர் நெல்லூரில் கைது

ஆவடி

ஆவடியில் வசிக்கும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராதேஷ் ஷியாம் (28), ராக்கி(25) தம்பதிக்கு ராத்திகா(4), அத்தீஷ் பிரஜாபதி(2), 6 மாதமே ஆன அமீத் ஆகிய குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் ராதேஷ் ஷியாம் பணிபுரிந்தபோது, அங்கு அறிமுகமான ஷானிகுமார்(26) என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, தமிழகம் வந்து ராதேஷ் ஷியாம் வீட்டிலேயே தங்கி அவரது உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இச்சூழலில், நேற்று முன்தினம் அத்தீஷ் பிரஜாபதிக்கு சாக்லெட் தருவதாக கூறி ஷானிகுமார் அழைத்து சென்றார். மாலை 4 மணிவரை இருவரும் வீடு திரும்பாததால், ராதேஷ் ஷியாம் ஆவடி போலீஸில் மாலை 7 மணியளவில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போதே, ராதேஷை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஷானிகுமார், “குழந்தையை தான் கடத்தி வைத்துஉள்ளதாகவும், ரூ.5 லட்சம் பணம் தந்தால் குழந்தையை திரும்ப தருவேன். இல்லையென்றால் கொன்றுவிடுவேன்” என்றும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, தனிப்படைபோலீஸார் ஷானிகுமாரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, இடம் தொடர்ந்து மாறி மாறி காட்டியது. இதனால் ராதேஷை செல்போனில் ஷானிகுமாரிடம் பேசச் செய்தனர். இந்த உரையாடலை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தபோது பின்னணியில் ரயில் ஒலி எழுப்பும் சத்தம் கேட்டதால், ஷானிகுமார் ரயிலில் பயணம் செய்வதை உறுதி செய்தனர். தொடர்ந்து, செல்போன் சிக்னலை பயன்படுத்தி ஷானிகுமார் பயணித்த ரயிலை கண்டறிந்தனர்.

ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியில் ஷானிகுமார் இருப்பதை அறிந்த போலீஸார், நெல்லூருக்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்று, விடுதி ஒன்றில் அத்தீஷ் பிரஜாபதியுடன் உறங்கிக் கொண்டிருந்த ஷானிகுமாரை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x