

கோவை மாவட்டம் போத்தனூர் அருகேயுள்ள கோணவாய்க்கால் பாளையத்தைச் சேர்ந்த லாரா விண்ணரசி (35), மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்தார்.
அதில், நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மணி (44) என்பவர் தம்மிடம் ரூ.5.25 லட்சத்தை ஏமாற்றி விட்டதாக தெரிவித்திருந்தார்.
போலீஸார் மணி மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த கர்நாடக மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்த மஞ்சுநாதா (35) மீதும் வழக்கு பதிந்து விசாரித்தனர். நேற்று முன்தினம் இரவு மணியை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுபற்றி பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜேந்திரன் கூறும்போது, 2017 முதல் சிமென்ட் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், தன்னிடம் ரூ.1.45 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் ரூ.22,500 ஆதாயத் தொகை குறிப்பிட்ட மாதத்துக்கு தரப்படும். பின்னர் அசல் தொகை தரப்படும். முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப ஆதாயத்தொகை அதிகரிக்கப்படும் எனக்கூறியுள்ளார்.
இதை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் இவரிடம் கோடிக் கணக்கில் முதலீடு செய்துஉள்ளனர். முதல்கட்ட விசாரணையில் இவர்கள் ரூ.25 கோடி வரை மோசடி செய்திருக்கலாம் எனத் தெரிகிறது’’ என்றார்.