

கரோனா வைரஸ் பரவும் அச்சம் மற்றும் பறவைக் காய்ச்சல் காரணமாக முட்டை விலை நேற்று ஒரே நாளில் 70 காசுகள் வீதம் சரிந்து, ரூ.1.95 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குப் பின் முட்டை விலையில் ஏற்பட்டுள்ள சரிவு கோழிப்பண்ணையாளர்களை கலக்கமடையச் செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன. நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு நாள்தோறும் 70 லட்சத்துக்கும் அதிகமான முட்டை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை நீங்கலாக மீதமுள்ள முட்டை தமிழக சத்துணவு திட்டம் மற்றும் கேரளா, தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) விலை நிர்ணயம் செய்கிறது. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவும் அச்சம், கேரள, கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் காரணமாக முட்டை நுகர்வு பரவலாக குறைந்துஉள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கு முன் ரூ.3.55 காசுகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை விலை படிப்படியாக சரிந்து நேற்றைய நிலவரப்படி ஒரு முட்டை பண்ணை கொள்முதல் விலையாக ரூ.1.95 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் முட்டை விலை 70 காசுகள் சரிந்தது.
ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குப் பின் முட்டை விலையில் ஏற்பட்டுஉள்ள இந்த சரிவு கோழிப்பண்ணையாளர்களை கலக்கம் அடையச் செய்துள்ளது. இதே விலை வரும் 24-ம் தேதி வரை நீடிக்கும் என என்இசிசி நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் பி.செல்வராஜ் தெரிவித்து உள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, முட்டை விலை வீழ்ச்சி அடைந்ததுடன், கொள்முதல் செய்வதும் குறைவாக இருப்பதால் முட்டையை கோழிப்பண்ணையாளர்கள் அவர்களது சொந்த வாகனம் மூலம் கிராமங்களுக்கு நேரடியாக கொண்டு சென்று விற்பனை செய்யும் வேலையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.