

அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி விட்டதால் அந்நாட்டு மருத்துவர்கள் உள்ளூர் நோயாளிகளைக் கைவிட்ட நிலையில் உலக சுகாதார அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த நோயாளிகளுக்கு தமிழக மருத்துவர்கள் ‘ஸ்கைப்’ மூலம் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்பையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ் தற்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. அந்த நாடுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த சில மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கரோனா வைரஸ் பாதிப்பில் இறந்துள்ளனர்.
அதனால், அந்நாடுகளில் மருத்துவர்கள், இந்த வைரஸ் காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாகக் கூறப்படுகிறது.
அப்படியே சிகிச்சை அளித்தாலும் அவர்களால் குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கும், அதன் அறிகுறி இருப்போருக்கும் மட்டுமே சிகிச்சை, ஆலோசனைகளை வழங்க முடிகிறது. அதனால், சிகிச்சைக்காக நோயாளிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது இந்தியாவில் உள்ள தலைசிறந்த நுரையீரல் நோய் மருத்துவர்கள், வெளிநாடுகளில் கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கும், அறிகுறியிருக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சை, ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
இதுகுறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சிலர் கூறும்போது, “இன்றைய தொழில்நுட்பத்தில் உலகில் எந்த மூலையில் இருக்கிறவர்களிடமும் அவர்கள் அருகில் இருப்பதுபோன்று ‘ஸ்கைப்’ மூலம் பேசலாம். கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ‘ஸ்கைப்’ கைகொடுத்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்கள் நள்ளிரவு நேரங்களில் தூக்கத்தையும் பொருட்படுத்தாமல் வெளிநாடுகளில் வசிக்கும் நோயாளிகளுக்குச் சிகிச்சை, ஆலோசனைகளை வழங்குகின்றனர்” என்றனர்.