Published : 19 Mar 2020 08:12 AM
Last Updated : 19 Mar 2020 08:12 AM

அரசியல் கடந்து அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்; தமிழகத்தை நீர் மிகை மாநிலமாக மாற்றுவோம்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

சட்டப்பேரவையில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய உறுப்பினர்களுக்கு பதில் அளித்து முதல்வர் பேசியதாவது:

சென்னை பெருநகரத்தில் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைக்கும் வகையில் கோயம்பேடு, பல்லாவரம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் உள்ளிட்ட 9 இடங்களில் நடைபெறும் மேம்பாலப் பணிகள் இந்த ஆண்டில் முடிவடையும். ரூ.6,448 கோடியில் 590 கி.மீ. நீளத்துக்கு 15 மாநில நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. சென்னை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கும் வகையில் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து பூஞ்சேரி சந்திப்பு வரை 133 கி.மீ. நீளத்தில் சென்னை எல்லைச் சாலை அமையவுள்ளது.

தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் 1 மற்றும் 2 பகுதிகளில் 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. சென்னைக்கு கிருஷ்ணா நீர் இதுவரை 6.6 டிஎம்சி வந்துள்ளது. இதற்காக ஆந்திர முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டத்தில் மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா -பெண்ணாறு - பாலாறு - காவிரி - வைகை - குண்டாறு மற்றும் பம்பா - அச்சன்கோவில் - வைப்பாறு நதிகளை இணைக்கும் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பிரதமர் மற்றும் மத்திய ஜல்சக்தி அமைச்சரிடத்தில் தமிழகத்துக்கு கோதாவரியில் இருந்து குறைந்தபட்சம் 200 டிஎம்சி தண்ணீர் அளிக்க வேண்டும் என்றும், மகாநதி - கோதாவரி இணைக்கப்படு்ம்போது தமிழகத்துக்கு திருப்பப்படும் நீரின் அளவை உயர்த்தி 300 டிஎம்சி நீர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்றும், இத்திட்டத்துக்கு முன்னுரிமை அளித்து விரைவில் நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிசாதனை படைத்தார். அதுபோல் நீர்மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே எனது லட்சியம்.

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் பிரம்மாண்டமாக, அனைவரும் வியக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இப் பணி விரைவில் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இ்வ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

மக்களுக்கு பணி செய்யும் சேவகன் நான்’

சட்டப்பேரவையில் நேற்று தனது பதில் உரையின்போது முதல்வர் பழனிசாமி நெகிழ்ச்சியுடன் பேசியதாவது: தமிழகத்தின் முதல்வராக நான் நினைத்துக் கொள்வதைவிட இந்த மண்ணில் வாழும் மக்களுக்கு பணி செய்யும் சேவகனாகவே என்னைக் கருதுகிறேன். நான் எந்த விவசாய குடும்பத்தில் பிறந்தேனோ அந்த விவசாயப் பெருமக்களின் இன்னல்களை உணர்ந்து, வளர்ந்த காரணத்தால் இன்று அந்த விவசாயிகளுக்கு ஒரு உழவன் வீட்டுப் பிள்ளையாக இருந்து அவர்களுக்காக சிறப்பான சேவைகளை உளமாற செய்து வருகிறேன்.

நான் காரில் பயணம் செய்கிறபோது, அடைகிற பெருமிதத்தைவிட திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டிய கூட்டத்தில் கலந்துகொள்ள உழவர் பெருமக்களின் மாட்டு வண்டியில் நான் ஏறி, அந்த மாட்டு வண்டியை ஓட்டிச்சென்றபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

நான் இதுகாலம் வரை எந்த சட்ட முன்வடிவுகளையும் சமர்ப்பித்தது இல்லை. இப்பேரவையில் நான் சமர்ப்பித்த ஒரே சட்ட முன்வடிவு டெல்டா எனப்படும் படுகை விவசாயப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரும் சரித்திரப் புகழ்மிக்க சட்டமுன்வடிவு. அதுவே பெரும் ஆதரவுடன் சட்டம் ஆக்கப்பட்டது. ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த நான் இந்த சட்ட முன்வடிவை இப்பேரவை யில் முன்வைத்து அதனை சட்டமாக்கி இருப்பதை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இதனை என் வாழ்வில் பெரும் பாக்கியமாக கருது கிறேன். இத்தகைய வாய்ப்பை வழங்கிய காலத்துக்கும், கடவுளுக்கும், அம்மாவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பித்து வணங்குகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x