Published : 19 Mar 2020 07:42 AM
Last Updated : 19 Mar 2020 07:42 AM

ஆவடி படை உடை தொழிற்சாலையில் தமிழக காவல் துறைக்கு கவச உடைகள் தயாரிப்பு

ஆவடி படை உடை தொழிற்சாலை, தமிழக காவல் துறைக்கு தேவையான குண்டு துளைக்காத கவச உடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான படைஉடை தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. 1961-ம் ஆண்டுதொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலை நேற்று (மார்ச் 18), `படைக்கல தொழிலக நாள் விழா'வை கொண்டாடியது.

சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஆலையில் நவீன ஆடை வடிவமைப்பு, துணி வெட்டும் இயந்திரங்கள், உயர் தொழில்நுட்ப தையல் இயந்திரங்கள் மற்றும் முப்படைகளின் சீருடைகள் உள்ளிட்டவைக்கு தேவையான துணி உள்ளிட்ட மூலப்பொருட்களைச் சோதனைசெய்யும் மையம் உள்ளிட்டவைஉள்ளன. இந்தத் தொழிற்சாலையில் தற்போது 800 பெண்கள் உட்பட 2,600 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

முப்படை வீரர்களின் தேவைக்கேற்ற சீருடைகள், ராணுவ சின்னம் பதிக்கப்பட்ட சீருடைகள், பாராசூட்கள், கூடாரங்கள் உள்ளிட்டவை ஆண்டுதோறும் ரூ.350 கோடிமுதல் ரூ.400 கோடி வரையானமதிப்பில், சுமார் 12 லட்சம் எண்ணிக்கையில் இந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி, மத்திய ரிசர்வ் படை போலீஸாருக்குத் தேவையான சீருடைகளையும் ஆவடி படை உடை தொழிற்சாலை அவ்வப்போது தயாரித்துத் தருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவடி படை உடை தொழிற்சாலை, கொல்கத்தாவில் அமைந்துள்ள படைக்கல வாரியத்தின்கீழ் செயல்பட்டு வரும் 41 தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இந்த ஆவடி படை உடை தொழிற்சாலையின் மேம்பாட்டுப் பிரிவு இந்திய ராணுவம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் காவலர்கள் பயன்படுத்தும் AYUDH KAVACH என்னும் குண்டு துளைக்காத கவசம் (BULLET RESISTANCE JACKET) மற்றும் எளிதில் தீப்பற்றாத சீருடைகள் ஆகியவற்றை ஆய்வின் மூலம் தயாரித்து பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஆவடி படை உடை தொழிற்சாலை இந்திய காப்புரிமை நிறுவனத்தின் மூலம் 8 தயாரிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது.

இந்நிலையில், நேற்று படைக்கல தொழிலக நாள் விழாவை கொண்டாடிய ஆவடி படை உடை தொழிற்சாலை, தமிழக காவல்துறைக்கு 230 குண்டு துளைக்காத கவச உடைகளை தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறது. தொலைதூரத்தில் இருந்துசுடப்படும் ஏ.கே. 47 ரக துப்பாக்கி குண்டுகள் கூட துளைக்காத வகையில் 8.9 கிலோ எடையில் இந்த கவச உடைகள் தயாரிக்கும் பணிநடைபெற்று வருகிறது என,தொழிற்சாலையின் பொதுமேலாளர் சுர்ஜித் தாஸ், கூடுதல் பொதுமேலாளர் மதிவாணன் ஆகியோர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x