

கரோனா வைரஸும், அதன் தாக்கமும் மக்களுக்கு மன அழுத்தத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளதாக உலக சுகாதார மையம் (WHO) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை கரோனா வைரஸ், பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் இந்த வைரஸ் பரவலாம் என்ற அச்சத்தால், சுகாதாரத் துறை பாதுகாப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.
மக்கள் அதிகம் கூடும் சுற்றுலாத் தலங்கள், மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. காய்கறிகள், பலசரக்குக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர, மற்ற அனைத்தையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி மூலம் கைகளைக் கழுவிய பிறகே தற்போது பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், வராமல் தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
ஆனால், கரோனா வைரஸ் அச்சத்தால் காய்ச்சல், சாதாரண சளி வந்தாலே மக்கள் பதற்றம் அடைந்துவிடுகின்றனர். அதனால், தற்போது இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை விட, அது நம்மை தாக்கி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே அதிகமாக பரவி வருகிறது. இதனால், கரோனா வைரஸும் அதன் தாக்கமும் பலருக்கு மன அழுத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன என்று உலக சுகாதார மையம் (WHO) கவலை தெரிவித்துள்ளது.
தினந்தோறும் சமூகவலைத்தளங்களில் கரோனா வைரஸ் பற்றி உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவிக் கொண்டே இருக்கின்றன. இதை தொடர்ச்சியாக பார்க்கும்போதும், படிக்கும்போதும் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குகிறது. அதனால், பயம், பதற்றம் மற்றும் மன அழுத்தம் உருவாகிறது. அதுவே மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியையும், மன வலிமையையும் குறைக்கும் என்று மனநல வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மனநல ஆலோசகர் மற்றும் உள சிகிச்சையாளர் ப.ராஜ சவுந்தர பாண்டியன் கூறியதாவது: கரோனா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சைப் பெறுகிறவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் அடையாளப்படுத்தக் கூடாது. அது அவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தை உருவாக்கும். இந்த வைரஸ் காய்ச்சல் பற்றிய மன கவலை அல்லது மன உளைச்சல் இருந்தால் இந்த காய்ச்சல் தொடர்பான தகவல்களை தொடர்ந்து பார்ப்பது, படிப்பது அல்லது கேட்பதைத் தவிர்க்கவும்.
கரோனா வைரஸ் பற்றி புது தகவல்கள் தேவைபட்டால் ஒரு நாளில் ஒரு முறை அல்லது 2 முறை தேடுங்கள். தொடர்ச்சியாக தேடுவதை தவிர்க்கவும். நம்பகத்தன்மையுள்ள செய்திகளை மட்டும் ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மற்றவர்களுக்குப் பகிரவும். உங்களுக்கு அதைப் பற்றிய விவரங்கள் தேவை என்றால் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உலக சுகாதார மைய இணையதளத்தில் அல்லது அரசின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். முதலில், இந்த வைரஸ் காய்ச்சலில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது மற்றவர்களுக்கு ஆதரவாக இருங்கள். மற்றவர்களுக்குத் தேவையான நேரத்தில் உதவுங்கள்.
கரோனா வைரஸ் பற்றிய நேர்மறையான செய்திகளை பகிருங்கள். குறிப்பாக இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்கள் பற்றி அதிகம் பகிரலாம். அது மக்களிடையே பீதியைக் குறைக்கும் மற்றும் தேவையற்ற அச்சத்தை போக்கும். இந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்தால் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்புவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.