கணவர்  கொலை  வழக்கில்  மனைவி உள்ளிட்ட இரண்டு பேருக்கு ஆயுள்: ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

கணவர்  கொலை  வழக்கில்  மனைவி உள்ளிட்ட இரண்டு பேருக்கு ஆயுள்: ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே கணவர் கொலை வழக்கில் மனைவி மற்றும் கணவரின் சகோதரருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அபிராம் அருகே கீழக்கொடுமலூரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மூத்த மனைவியின் மகன் ஆறுமுகம் (29). இவரது மனைவி போதும்பொண்ணு(28). கருப்பையாவின் 2-வது மனைவியின் மகன் வேல்முருகன்(27).

இவருக்கும், போதும்பொண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரையும் ஆறுமுகம் கண்டித்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 17.7.2018 அன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகத்தை, போதும்பொண்ணும், வேல்முருகனும் இரும்புக்கம்பியால் தாக்கி, கட்டிலில் கட்டி வைத்து எரித்துக் கொன்றனர். இதுதொடர்பாக அபிராமம் போலீஸார் கொலை வழக்கில் போதும்பெண்ணு, வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சண்முக சுந்தரம் தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கணவரின் தம்பியுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற போதும் பொண்ணுவிற்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2000 அபராதமும் விதித்தார். அண்ணனை கொன்ற வேல்முருகனுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.2,000 அபராதம் விதித்தார்.

மேலும் அண்ணனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்தும், இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத்தவறினால் இருவரும் மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in