Published : 18 Mar 2020 09:42 PM
Last Updated : 18 Mar 2020 09:42 PM

கரோனா அறிகுறி; சந்தேகத்தின் பேரில் 2,984 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் கரோனா வைரஸ் அறிகுறி சந்தேகத்தின் பேரில் 2,984 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

''ரயில்வே போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில், இந்திய ரயில்வே போலீஸுடன் இணைந்து ஸ்க்ரீனிங் வேலையைத் தொடங்கியுள்ளோம். ஸ்க்ரீனிங்குக்கு தேவையான அனைத்து சாதனங்களையும் ரயில்வேவுக்கு கொடுத்துள்ளோம்.

அனைத்து சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. வழக்கமான ரயில்கள் ஓடுகின்றன. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை இதுவரை தீவிரமாகக் கண்காணித்து வந்தோம். தற்போது வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதுதான் தற்போது மிக முக்கியம்.

பாதிக்கப்பட்ட மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளாவிலிருந்து வரக்கூடியவர்களை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். இதுதவிர சாலை மார்க்கமாக வருபவர்களை காவல்துறை, கால்நடைத் துறையுடன் இணைந்து தீவிரக் கண்காணிப்பைச் செய்து வருகிறோம். இதுவரை 1 லட்சத்து 89 ஆயிரத்து 750 பேரைக் கண்காணித்து வருகிறோம்.

தமிழகத்தில் கரோன வைரஸ் தொடர்பாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். டெல்லியிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்த 20 வயது இளைஞருக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருடன் வந்தவர்கள் யார், அவருக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளார் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று என சந்தேகத்தின் பேரில் 2,984 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

பொதுமக்கள் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அதற்காகத்தான் பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன''.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x