

தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதா? இதனால் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதா? என மக்களவையில் எம்.பி.யும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக தலைவருமான டி.ஆர்.பாலு இன்று மக்களவையில் தொலைத்தொடர்பு சேவை வழங்கு நிறுவனங்களின் எண்ணிக்கை 3 ஆக குறைந்துவிட்டது என்றும் இதனால் தொலை தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதா? என்றும் அதற்கான அரசின் முயற்சியில் என்ன என்றும் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அளித்த பதில்:
''பாரதி ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நான்கு நிறுவனங்கள் மட்டுமே தற்போது தொலைத்தொடர்பு சேவை வழங்கி வருகின்றன. 2012 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆணையின் படி 122 தொலைத்தொடர்பு உரிமங்கள் நீக்கப்பட்டு விட்டன. நான்கு சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுவிட்டன.
சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திவால் மற்றும் கடனாளிகள் சட்டத்தின் கீழ் மூடப்பட்டு வருகிறது. தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் எண்ணிக்கை குறைந்ததன் விளைவாக தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படவில்லை. மாறாக 2014-ம் ஆண்டில் 6.5 லட்சமாக இருந்த தொலைத்தொடர்பு நிலையங்கள் 2020 ஆம் ஆண்டில் 22 லட்சமாக உயர்ந்துள்ளன.
115 கோடி மக்களுக்கு தொலைத்தொடர்பு சேவை கிடைத்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் முதலே பயனீட்டாளர்கள் செலுத்தும் கட்டணம் தொடர்ந்து குறைந்து வருவதுடன் ஆரோக்கியமான போட்டியின் காரணமாக தொலைத்தொடர்பு சேவையில் தரமும் மேம்பட்டு வருகிறது''.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் பதிலளித்தார்.