

முகக்கவசங்கள் ஸ்டாக் இல்லை என்று உற்பத்தியாளர்கள் கை விரிப்பதால் ‘கோவிட்-19’ வைரஸ் தீவிரமடைந்தால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
கரோனா வைரஸ் தொற்று காய்ச்சல் உலகம் முழுவதும் வேகமாக பரவுகிறது. இந்தியாவிலும் இந்த நோய் தீவிரமடைந்துள்ளது. அன்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் இந்த நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்களுக்கு தங்களை நோயாளிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசங்கள் அணிந்து கொள்ளும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதனால், தற்போது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள்முககவசங்கள் அணிந்தநிலையில் பணிபுரிய தொடங்கியுள்ளனர். குறிப்பாக நுரையீரல் மருத்துவ சிகிச்சைப்பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசங்கள் அணிந்துகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முககவசங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தீவிரமடையும்போது 2, 3 வாரங்களில் முகக்கவசங்கள் இல்லாமல் போக வாய்ப்பு இல்லை. அப்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், தற்போதே மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் அச்சமடையதொடங்கி உள்ளனர்.
மருத்துவர்கள் கூறுகையில், ‘‘முக கவசங்கள் தேவை தற்போது அதிகரித்துள்ளது. ஆனால், உற்பத்தி தேவைக்கு தகுந்தார்போல் இல்லை. அதனால், பற்றாக்குறை ஏற்பட தொடங்கியுள்ளது.
முகக்கவசங்கள் உற்பத்தியாளர்கள் ‘ஸ்டாக்’ இல்லை என்கின்றனர். ஆனால், முககவசங்களை பதுக்கி வைத்து இன்னும் தேவை அதிகரிக்கும்போது கூடுதல் விலைக்கு விற்க வாய்ப்புள்ளது.
அதனால், உற்பத்தியாளர்களை கண்காணித்து அதன் உற்பத்தியை அதிகரிக்கவும், பதுக்கி வைத்துள்ளதை விற்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு கண்காணிக்காவிட்டால் தரமில்லாமல் முககவசங்களை உற்பத்தி செய்து வழங்கவும் வாய்ப்புள்ளது, ’’ என்றனர்.