

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து வழக்கமாக எந்தவிதபாதிப்பும் இன்றி கேரளாவிற்கு காய்கறிகள் அனுப்பப்பட்டுவருகிறது. கேரளா செல்லும் லாரிகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே மார்க்கெட்டில் இருந்து வெளியேறுகின்றன.
திண்டுக்கல்லில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் தமிழகத்தின் பெரிய காய்கறி மார்க்கெட்களில் ஒன்றான காந்தி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கிருந்து சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிறபகுதிகள் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பிவைக்கப்படுகின்றன.
இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஒட்டன்சத்திரம் காய்கறிமார்க்கெட்டில் ஒரு டாக்டர், இரண்டு செவிலிர்களை கொண்ட மருத்துவக்குழு அடங்கிய மருத்துவமுகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மார்க்கெட்டிற்கு வரும் விவசாயிகள், வியாபாரிகளிடம் கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
மாலையில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கேரளா புறப்படும் லாரிகளில் நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளிக்கின்றனர்.
வழக்கமாக தினமும் 20 லாரிகளில் கேரளாவிற்கு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் சென்றுவந்தது. தற்போது 15 லாரிகளில் காய்கறிகள் அனுப்பப்பட்டுவருகிறது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் வியாபாரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வழக்கமாக செயல்பட்டுவருகிறது.
இருந்தபோதும் மார்க்கெட் செயல்படும் நேரத்தில் நிரந்தரமாக மருத்துவ முகாம் அமைத்து மருத்துவர்கள் கண்காணித்தும் வருகின்றனர்.