

மது விலக்கை அமல்படுத்தக் கோரி முதல்வர் ஜெயலலிதா வீட்டின் முன்பு போராட்டம் நடத்த முயன்ற சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், குறிப்பிட்ட ஒரு மதுபான ஆலையை மூடக்கோரியும் போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று காலை போராட்டம் நடத்துவதற்காக தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள சட்டப்பஞ்சாயத்து இயக்க அலுவலகத்தில் இருந்து செந்தில் ஆறுமுகம், அண்ணாதுரை, ஜெய்கணேஷ், அயூப்கான், விஸ்வநாதன் உட்பட 25-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.
தி.நகர் அலுவலக வாசலில் வைத்தே அவர்களை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அருகே இருந்த ஒரு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டவர்களை மாலையில் விடுவித்தனர்.