

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ரயில் நிலையங்களில் பார்வையாளர்களுக்கான பிளாட்பார்ம் கட்டணத்தை ரயில்வே உயர்த்தியது. மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், தென்காசி மாவட்ட மக்கள் அரசின் நடவடிக்கைக்கே சவால் விடும் வகையில், பிளாட்பார்ம் கட்டணம் தானே 10 ரூபாய், நாங்கள் பக்கத்து ஊருக்குச் செல்வதற்கு ரூ.10 டிக்கெட் எடுத்து எங்கள் உறவினர்களை வழியனுப்புவோம் என்று இறங்கியுள்ளனர்.
இதனால், ரயில் நிலையத்தில் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க இயலாத சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் கரோனா (கோவிட்- 19 வைரஸ்) காய்ச்சலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
வழக்கமாக காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்களுடன் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் சாலைகள் இன்று நெரிசலின்றி காணப்பட்டன.
கோவிட்- 19 அச்சத்தால் பெரும்பாலான மக்கள் வெளியிடங்களுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். தென்காசி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
ரயில் நிலையத்தில் வெளியூர்களுக்குச் செல்வோரை வழியனுப்ப அதிக நபர்கள் வருவதைத்தடுக்க பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியில் இருந்து மதுரை வரை செல்வதற்கு ரயில் கட்டணம் 40 ரூபாய் மட்டுமே. ஆனால், மதுரைக்குச் செல்லும் உறவினரை வழியனுப்ப வருபவர்கள் 50 ரூபாய் கொடுத்து பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதைத் தவிர்க்க, அருகில் உள்ள ஊர்களுக்குச் செல்வதற்கான 10 ரூபாய் பயண டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்துக்குள் சென்று, உறவினர்களை பலர் வழியனுப்பிவிட்டு திரும்பிச் சென்றனர்.