ஐசிஎஃப் கால்வாய் இணைப்புப் பாலம்: சட்டப்பேரவையில் ஸ்டாலின் வலியுறுத்தல்

ஐசிஎஃப் கால்வாய் இணைப்புப் பாலம்: சட்டப்பேரவையில் ஸ்டாலின் வலியுறுத்தல்
Updated on
2 min read

கொளத்தூர் பிரதான சாலை, ஐசிஎஃப் கால்வாயை இணைக்கும் இணைப்புப் பாலம் கட்டுவது குறித்து கோரிக்கையை முன்வைத்து ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார்.

சட்டப்பேரவையில் இன்று காலை (18.03.2020) கொளத்தூர் பிரதான சாலை, ஔவையார் நகர் மற்றும் ஐசிஎஃப் கனால் சாலையை இணைக்கும் பகுதியில் பாலம் அமைக்கும் பணி குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

''கொளத்தூர் பிரதான சாலை, ஔவையார் நகர் மற்றும் ஐசிஎஃப் கனால் சாலையை இணைக்கக்கூடிய பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் தொடர்ந்து பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

நான் முதன்முதலாக சட்டப்பேரவை உறுப்பினராக அந்தத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் கடந்த ஜனவரி 16 -ம் தேதி அன்று, அப்போதைய மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபுவுக்கு அந்தப் பகுதியில் பாலம் கட்டவேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் நான் கடிதம் அனுப்பி வைத்திருந்தேன்.

அந்தக் கடிதத்தின் தொடர்ச்சியாக ஜூன் 11, 2015-ம் ஆண்டு என்னுடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்காக ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அந்தத் திட்டம் எடுத்துக்கொள்ளப்படுவதாக எனக்குக் கடிதம் வந்தது. தொடர்ச்சியாக இந்த மாமன்றத்தில் இந்தப் பிரச்சினை குறித்து 4 முறை பேசி அவையின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறேன். தற்போது இந்த-ப் பாலம் அமைப்பதற்குத் தேவையான 1,230 சதுர மீட்டர், அதோடு சேர்ந்த 800 சதுர மீட்டர் கட்டிடத்தை இடிப்பதற்கு ரூ.10.75 கோடியை ஐசிஎஃப் நிறுவனம் கோரியிருக்கிறது.

தற்போது ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தையும் பயன்படுத்தும் காரணத்தால், ரூ.15.36 கோடியை ஐசிஎஃப் நிறுவனம் கோரியுள்ளதாக எனக்குச் செய்தி வந்திருக்கிறது. எனவே இந்தப் பணி வேகமாக நடைபெற ஐசிஎஃப் நிறுவன பொது மேலாளரைச் சந்திப்பதற்காக எங்களது வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினரை அனுப்பி இதுகுறித்து நினைவுபடுத்தி வலியுறுத்திச் சொல்லி இருக்கிறேன்.

தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடமும், எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினரை அனுப்பி இது குறித்து விவரம் கேட்டுள்ளோம். இதற்கு ஏற்கெனவே ரயில்வே துறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதில் கடிதத்தில், மே 30, 2020க்குள் ரயில்வே துறை சார்ந்த அனைத்துப் பணிகளும் நிறைவு பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, தற்போது செப்.10, 2019 அன்று இந்தப் பணிக்குரிய ஆணையை சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது. எனவே உடனடியாக ஐசிஎஃப் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய தொகை செலுத்தப்படுமா? அல்லது ஏற்கெனவே நிர்ணயித்த தொகையில் அந்தப் பணியை மேற்கொள்ள ஐசிஎஃப் நிறுவனம் அனுமதித்துள்ளதா? என்பது குறித்த அந்த முடிவை எடுக்க வேண்டும்.

அன்றாடம் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெரிசல் மற்றும் சங்கடங்களைக் களைவதற்கு, இந்த ஆண்டிற்குள்ளாவது போர்க்கால நடவடிக்கை எடுத்து, பாலம் கட்டும் பணியை நிறைவேற்றித் தருவதற்கு இந்த அரசு முன்வர வேண்டும்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in