

ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் அதிமுக தலைமை மீது கெட்ட கடுப்பில் இருக்கிறது கேப்டன் கட்சி. இருந்தாலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒதுக்கீட்டுக்காக அமைதி காக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு மேயர் சீட்டுகள் தங்களுக்கு வேண்டும் என கறாராகச் சொல்லி இருக்கிறதாம் தேமுதிக. இதில் ஏதாவது ஏடாகூடம் நடந்தால் அதிமுக கூட்டணியை விட்டு தேமுதிக ஆக்ரோஷமாக வெளியேறும் என்கிறார்கள். இதனிடையே, திருப்பரங்குன்றத்தில் நடந்த மகளிர் தினவிழாவில் விஜயகாந்தை சாட்சியாக வைத்துக்கொண்டு பேசிய தேமுதிக மதுரை மாவட்ட முன்னாள் செயலாளர் சிவமுத்துக்குமார், "கேப்டன் அவர்களே... பீரங்கி குண்டை கையில் குடுத்து பழக்கப்படுத்திட்டு இப்ப எங்களை கோலி குண்டுகளோடு சேர்ந்து விளையாட விட்டுட்டீங்க. இதை எங்களால் நீண்ட காலம் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. ‘நான் பாதிக்கப்பட்டாலும் என் உயிரினும் மேலான தொண்டர்களைப் பாதிக்க விட மாட்டேன்’ என்றீர்கள். தொண்டர்களாகிய நாங்கள் அவமானப்பட்டாலும் சரி, நீங்கள் அவமானப்படக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். வரும் தேர்தலில் அந்தக் கட்சிகளுக்கு நீங்கள் தக்க பாடம் புகட்டவேண்டும்" என்று வெடித்துச் சிதறிவிட்டார். இனி, இதுபோன்ற வெடிகள் ஆங்காங்கே வெடிக்கும் என்கிறார்கள்.
- காமதேனு இதழிலிருந்து (மார்ச் 22, 2020)