மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த முடிவு: மத்திய அரசின் செயலாளர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த முடிவு: மத்திய அரசின் செயலாளர் தகவல்
Updated on
1 min read

மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக் கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்த திட்ட மிடப்பட்டுள்ளதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர் லோவ் வெர்மா தெரிவித்தார்.

சர்வதேச டவுன் சிண்ட்ரோம் அமைப்பு மற்றும் தமிழக டவுன் சிண்ட்ரோம் சங்கம் இணைந்து நடந்தும் 12-வது உலக டவுன் சிண்ட்ரோம் (மரபணு குறைபாடு) மாநாடு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயலாளர் லோவ் வெர்மா மற்றும் விவேகானந்தா அறக்கட்டளை ஆலோசனைக் குழு உறுப்பினர் எஸ்.குருமூர்த்தி ஆகியோர் மாநாட்டை தொடங்கி வைத்தனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து டவுன் சிண்ட்ரோம் உள்ள 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் லோவ் வெர்மா பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இதற்கான சட்டத்திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த சட்டத்திருத்தத்தில் மாற்றுத்திறனாளிகளின் வகைகளை 9-ல் இருந்து 15 ஆக மாற்றுவது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும். மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 1 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மொத்தம் 25 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் சார்ந்த பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாற்றுத்திறனாளி களுக்கு 2 விதமான உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் ரூ.30 லட்சம் வரை உதவித்தொகை பெற முடியும். இந்தியாவில் முதல் கட்டமாக போபால், ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்ல வசதிகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப் பட உள்ளது. நாடு முழுவதும் 48 முக்கியமான நகரங்களில் ஆய்வு செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in