

முகக்கவசம், சானிட்டைசர் போன்ற கோவிட்- 19 வைரஸ் தடுப்பு உபகரணங்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள்தான் தற்போது இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கம் பெரிய அளவில் இல்லை. எனினும் அடுத்த 15 நாட்கள் மிகவும் முக்கியமான நாட்களாகக் கருதப்படுகிறது.
இதற்காகவே, கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், விளையாட்டு மைதானங்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.
`கோவிட்- 19 வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுவதை தடுக்க வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும். எல்லா இடங்களிலும் சோப்பு போட்டு கழுவ முடியாதவர்கள், சானிடைசர் என்ற மருந்து திரவத்தைக் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்’ என அரசு அறிவுறுத்தியுள்ளது.
`தமிழகத்தில் அனைத்து மக்களும் முகக்கவசம் அணிந்து சுற்ற வேண்டிய நிலை இன்னும் வரவில்லை’ என, அரசு கூறியபோதிலும், கோவிட்- 19 வைரஸ் பீதி காரணமாக மக்கள் தாங்களாகவே முன்வந்து முகக்கவசங்களை அணிந்து வெளியே வரத் தொடங்கியுள்ளனர். மேலும், பல்வேறு நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களுக்காக மொத்தமாக முகக்கவசங்களையும், சானிடைசர் திரவத்தையும் வாங்கத் தொடங்கின. இதனால், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
தூத்துக்குடியில் எந்த மருந்து கடையிலும் கடந்த சில நாட்களாக முகக்கவசம் மற்றும் சானிடைசர் கிடைக்கவில்லை. தினமும் நூற்றுக்கணக்கானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதைக் காண முடிகிறது.
இதுகுறித்து, தூத்துக்குடியில் மருந்துக்கடை நடத்தும் டி.ரோசாரியோ சேவியர் கூறும்போது, ``கடந்த சில நாட்களாகவே எங்கள் கடையில் முககவசம் மற்றும் சானிடைசர் இருப்பில் இல்லை. முன்பெல்லாமல் யாராவது ஒன்றிரண்டு பேர்தான் முகக்கவசம் வாங்குவார்கள். தற்போது, கோவிட்-19வைரஸ் அச்சம் காரணமாக அனைவரும் முகக்கவசம் கேட்கின்றனர். அதுபோலத்தான் சானிடைசருக்கும் தேவை அதிகரித்துள்ளது” என்றார்.
மற்றொரு கடை உரிமையாளர் கூறும்போது, ``எங்கள் கடைக்கு கடந்த 14-ம் தேதி தலா 100 எண்ணம்கொண்ட 5 பண்டல் முகக்கவசம் வந்தது. ஆனால், சில மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்துவிட்டது. அதன்பின் அவைகிடைக்கவில்லை.
விலை உயர்வு
முன்பு ரூ.5-க்கு விற்பனை செய்யப்பட்ட முகக்கவசம் மருந்துக் கடைகளுக்கே ரூ.20-க்கு மேல்தான் கிடைக்கிறது. பொதுமக்களுக்கு ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல, சானிடைசர் திரவம் 500 மில்லி ரூ.410-க்குதான் விற்பனை செய்தோம். தற்போது 100 மில்லியே ரூ.220-க்கு விற்பனை செய்யப்படுகிறது” என்றார் அவர்.
நடவடிக்கை தேவை
இதுகுறித்து, எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் செயல் இயக்குநர் ஆ.சங்கர் கூறும்போது, ``தற்போதைய சூழலில் முகக்கவசம் மற்றும் சானிடைசர் போன்ற அத்தியாவசிய சாதனங்கள் தட்டுப்பாடின்றி மக்களுக்கு கிடைப்பதை அரசுதான் உறுதி செய்ய வேண்டும். அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கலாம். இவற்றின் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் அரசு செய்ய வேண்டும்” என்றார்.முகக்கவசம் கிடைக்காததால் முகத்தை துணியால் மூடிச் செல்லும் பெண்கள்.
படம்: என்.ராஜேஷ்