நோயாளிக்கு கோவிட்-19 அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனைக்கு உடனே அனுப்ப வேண்டும்: தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு
கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வந்தால் அந்நோயாளியை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுஉள்ளது.
தமிழகத்தில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் சிகிச்சைபெற்று வீடு திரும்பிவிட்டார். அறிகுறி இருப்போருக்கு அரசு மருத்துவமனை சிறப்பு வார்டுகளில் சிகிச்சை வழங்கப்படுகிறது.
டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க சுகாதாரத் துறை அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், கோவிட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை பரிசோதனை செய்யவும், சிகிச்சை அளிக்கவும் சுகாதாரத் துறை தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கவில்லை.
அறிகுறியிருந்தாலே சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவித்து அந்த நோயாளியை அரசு மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கூடுதல் படுக்கை வசதி, மருத்துவ உபகரணங்கள், தற்காப்பு மருந்துகளைத் தயார் நிலையில் வைத்திருக்க தனியார் மருத்துவமனைகளை சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவிட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், இந்த நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதைவிட அதைத் தடுப்பதில்தான் அதிக முக்கியத்துவம் காட்டப்படுகிறது.
நோய் அறிகுறியிருந்தால் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அந்த நோயாளிக்கு பன்றி காய்ச்சல் (swine flu) மருந்து சற்று கூடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கூடுதலாக இருக்கும் நோயாளிகள், இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டாலே தானாகசரியாகி வீடுகளுக்குத் திரும்புகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர் என்று கூறினார்.கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் உறுதியானால் அந்த நோயாளிக்கு பன்றி காய்ச்சல் மருந்து பயன்படுத்தப்படுகிறது.
