

தமிழகத்தில் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெறாமல் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி உறுதியளித்தார்.
சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் பேசியது:
தமிழகத்தில் 2 இடங்களில் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரையில் முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி வீட்டில் நடந்த குண்டுவீச்சு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமைச்சர் வீரமணி வீட்டில் குண்டு வீசப்பட்டுள்ளது. இது எவ்வளவு அபாயகரமானது என்பதை உணர வேண்டும்.
இந்த காலத்தில் இதுபோன்று தொடருமானால் வெறுக்கத்தக்கது. இந்த கலாசாரத்தை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
கும்பகோணத்தில் ஒரு வீட்டில் பத்திரிகை கொடுப்பதாக உள்ளே நுழைந்து கணவனை அடித்து கொல்கிறார்கள். மனைவியை அடிக்காமல் போய்விட்டார்கள். வீடுபுகுந்து கொலை செய்யும் சம்பவம், வெடிகுண்டு வீசும் சம்பவத்தை அனுமதிக்க முடியாது. மக்களுக்கு ஏதேனும் பயம் இருந்தால் மந்திரியிடம் சொல்லலாம். மந்திரி வீட்டில் குண்டு எறிந்தால் என்ன செய்வது. இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முதல்வர் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசினார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில், கடந்த 16-ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு சின்னக்கோடியூர் கிராமத்தில் உள்ள தங்கவேலு பீடி மண்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 30 பீடி இலை பண்டல்கள் சேதமடைந்துள்ளன. ஊழியர்கள் தீயை அணைத்துவிட்டனர். இந்த மண்டியில் 10 தொழிலாளர்கள் தான் பணியாற்றி வருகின்றனர். வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் சகோதரர்கள் அழகிரி, ராவணன் ஆகியோர் இதில் பங்குதாரர்களாக உள்ளனர். கே.சி.காமராஜ் நிர்வாகம் செய்து வருகிறார்.
தவறான செய்தி
இது ஒரு சாதாரண தீ விபத்துதான். ஆனால், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தவறான செய்தி வெளிவந்துள்ளது. இச்செய்தியை வைத்துதான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பேசியுள்ளார். இதுவரை இது தொடர்பாக எந்த வித புகார்களும் காவல்துறையில் பெறப்படவில்லை. யாரும் கொடுக்கவும் இல்லை. யாரும் கைது செய்யப்படவும் இல்லை.
இதுபோன்ற சம்பவங்கள் இப்போது மட்டும் நடைபெறவில்லை. உங்கள் ஆட்சிக் காலத்தில் சிவகங்கை நகராட்சி மன்ற தலைவராக இருந்தவர் காரில் செல்லும்போது குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. எல்லா ஆட்சியிலும் நடைபெறும் சம்பவம்தான். இருந்தாலும் குற்றங்களை குறைக்கவும் இதுபோன்ற சம்பவம் நடைபெறக் கூடாது என்பதற்காகவும்தான் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் சொந்த பிரச்சினைக்காக ஏற்படுகிறதே தவிர வேறு காரணங்களுக்காக அல்ல. இருந்தாலும் அதை கட்டுப்படுத்தி இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.