சென்னை தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகளை மூட மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகளை மூட மாநகராட்சி அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள பெரிய வணிக நிறுவனங்களை மூடுமாறு மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.

கோவிட்-19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், மதுபான பார்கள், கேளிக்கை விடுதிகள், உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையின் முக்கிய வர்த்தகப் பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிரபல வணிக நிறுவனங்கள் நேற்று திறந்திருந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார், உஸ்மான் சாலை உள்ளிட்ட தியாகராய நகரில் உள்ள பெரும்பாலான பிரபல வணிக நிறுவனங்கள் நேற்று வழக்கம்போல் இயங்கின.

இதுகுறித்து வணிக நிறுவன உரிமையாளர்கள் சிலரிடம் கேட்டபோது, ‘‘மால் என்ற வகைப்படும் வணிக வளாகங்களை மூடவே அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு எங்களுக்கு பொருந்தாது என்றே கருதுகிறோம். மேலும், எங்கள் வணிக நிறுவனங்களை மூடும்படி அதிகாரிகள் யாரும் நேரடியாக எங்களுக்கு தெரிவிக்கவில்லை’’ என்றனர்.

இந்நிலையில், பொதுமக்கள் பெருமளவில் கூடும் தியாகராய நகர் பகுதிகளில் வணிக நிறுவனங்களை மூட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in