Published : 18 Mar 2020 07:25 AM
Last Updated : 18 Mar 2020 07:25 AM

கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கை எதிரொலி: சென்னையில் வெறிச்சோடிய வணிக வளாகங்கள், திரையரங்குகள்

கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் சென்னையில் அனைத்து வணிக வளாகங்களும், திரையரங்குகளும் நேற்று வெறிச் சோடி காணப்பட்டன.

ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய-மாநிலஅரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்படும் என முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார்.

முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து சென்னையில் நேற்று அனைத்து பெரும் வணிக வளாகங்களும், திரையரங்குகளும் மூடப்பட்டன. தமிழக அரசின் உத்தரவை அடுத்து பெரு வணிகவளாகங்கள், உணவு மற்றும் கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் மார்ச் 31 வரை மூடப்படும் என்றஅறிவிப்பு நோட்டீஸ் வணிக வளாகங்களின் நுழைவு வாயில்களில் ஒட்டப்பட்டிருந்தன. சென்னையில் எப்போதும் அதிக மக்கள்நடமாட்டம் உள்ள ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ (இ.ஏ)நேற்று மூடப்பட்டு வெறிச்சோடிகாணப்பட்டது. ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் மட்டும் தனியார் செக்யூரிட்டிகள் நின்றுகொண்டிருந்தனர். அப்பகுதி யில் வழக்கமாக நிற்கும் ஆட்டோக்களையும் நேற்று காண முடியவில்லை.

“வழக்கமாக காலை 10 மணிமுதல் இங்கு கூட்டம் வரத் தொடங்கிவிடும். இந்த வளாகம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். ஆனால், இப்போது அதற்கு நேர்மாறாக இந்த வளாகம் இருக்கிறது. வணிக வளாகம் மூடப்பட்டது குறித்து தெரியாதவர்கள் மட்டும் வந்துபார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் செல்கிறார்கள்" என்று அங்கு பணியில் இருந்த பாதுகாவலர் ஒருவர் தெரிவித்தார்.

சென்னை நகரில் எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகம் போன்று எப்போதும் பரபரப்பாக காணப்படும் மயிலாப்பூர் சிட்டி சென்டர் வணிக வளாகம், அண்ணாசாலை ஸ்பென்சர் வளாகம், அமைந்தரை நெல்சன் மாணிக்கம் சாலை அம்பா ஸ்கைவாக் அண்ணா நகர் விஆர் மால், வடபழனி விஜயா போரம் மால், புறநகர் பகுதியில் மிகவும் பரபரப்பாக இருக்கும் வேளச்சேரி பீனிக்ஸ் மால் மற்றும் சென்னை நகரில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும் முக்கியமான திரையரங்குகளும் மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டன. வணிக வளாகம் மூடப்பட்டது குறித்து தெரியாதவர்கள் மட்டும் வந்து பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் செல்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x