‘கோவிட்- 19’ வைரஸ் அச்சம் எதிரொலி- செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் நகர் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது

செங்கல்பட்டு காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் கை கழுவிவிட்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
செங்கல்பட்டு காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் கை கழுவிவிட்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Updated on
1 min read

’கோவிட் - 19’ வைரஸ் அச்சம் எதிரொலியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நகர் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைய தொடங்கியுள்ளது.

அரசின் உத்தரவின்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் திரையரங்குகள், பள்ளிகள் மற்றும் மால்கள், மதுபானக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், 3 மாவட்டங்களிலும் அதிகாலை முதல் இரவு வரை பரபரப்பாக காணப்படும் நகர் பகுதிகளில் மக்களின் நடமாட்டம் குறையத் தொடங்கியுள்ளது.

அதே போல் 3 மாவட்டங்களிலும் மின்சார ரயில்கள், அரசு மற்றும் மாநகரப் பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கையும் குறைவாக காணப்பட்டது. இம்மாவட்டங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்டவற்றில் கிருமி நாசினி தெளித்தல், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கைகள் சுத்தம்

மேலும், இப்பகுதிகளில் உள்ள மசூதிகள், தேவாலயங்கள், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பொதுமக்கள் கைகழுவும் திரவத்தை கொண்டு கைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருந்த செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் தள்ளி வைத்துள்ளது.

புகார் தெரிவிக்க..

வைரஸ் அச்சம் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வருகையும் கணிசமாக குறைந்துள்ளது. பொதுமக்கள் கோவிட்-19 வைரஸ் நோய் தடுப்பு குறித்த புகார் தெரிவிக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 044-27237107, 044-27237207 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக - ஆந்திர எல்லையோரப் பகுதிகளில் ‘கோவிட் - 19’ வைரஸ் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, பிற மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்தல், பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் ‘கோவிட்-19’ பாதிப்பு தொடர்பான சந்தேகங்கள், புகார்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 மற்றும் 044-27666746, 044-27664177 என்ற தொலைபேசி எண்களுக்கும், 9444317862 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in