

கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தலைமைச் செயலர்உத்தரவிட்டுள்ளார். தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தினசரி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கோவிட்-19வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில், தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் சிறப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று தலைமைச் செயலர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறைஉயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். துறைவாரியாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அத்துடன், மாவட்ட ஆட்சியர்கள், துறைத் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவிட்-19 வைரஸ் தொடர்பாக அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு தேவையான பயிற்சி வழங்கப்பட வேண்டும். மாவட்ட அளவில்கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க வேண்டும். அதன் தொடர்பு எண்களை பொது சுகாதார மையங்களில் காட்சிப்படுத்த வேண்டும். தேவையான முகக்கவசம், என்95 முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்டவை இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்க வேண்டும். அரசு பொது மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அறைகள் இருக்க வேண்டும். கைகழுவும் திரவங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலையில், அவற்றை உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி தயாரிக்கும் வழிமுறைகள் குறித்து அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு பயிற்சி அளக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான வருவாய்த் துறைக்கு மற்ற துறைகளுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல் வழங்குதல், கண்காணித்தல் போன்றவற்றுக்கான முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு வருவதை தவிர்த்து அவர்களை தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள அறிவுறுத்த வேண்டும். வருவாய் நிர்வாக ஆணையருக்கு தினசரி பணிகள் குறித்த அறிக்கை அனுப்ப வேண்டும்.
போக்குவரத்து, சுகாதாரம், காவல் துறையுடன் இணைந்து மாநில எல்லையில் சோதனைச் சாவடிகள் அமைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் அவ்வப்போது ஆய்வுசெய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியருடன் இணைந்து காவல்துறையினர் செயல்படுவதுடன், பொதுமக்கள் அதிகளவில் கூடும்நிகழ்வுகளுக்கு அனுமதியளிக்கக்கூடாது.
ரயில் நிலையங்கள், ரயில்கள் முழுமையாக சுத்தப்படுத்தப்பட வேண்டும். காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் அந்த பயணிகளை மருத்துவ பரிசோதனை முகாமுக்கு அனுப்ப வேண்டும். பயணிகள் உள்ளே, வெளியே செல்லும் பகுதிகளில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்க வேண்டும்.
அரசு, ஆம்னி, தனியார் பேருந்துகளில் ஒரு சதவீதம் ஹைப்போ குளோரைடு, லைசால் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை முழுமையாக பரிசோதிக்க வேண்டும். அவர்களிடம் விவரங்களை பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுஅறிவுரைகளை தலைமைச் செயலர் வழங்கியுள்ளார்.