

சென்னையில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அமைச்சர் வேலுமணி தலைமையில், துறைச் செயலர்கள், ஆணையர்கள், காவல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று நடைபெற்றது.
நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகராட்சி, ஊரக வளர்ச்சித் துறை, காவல்துறை, தென்னக ரயில்வே மற்றும் இதர துறை அலுவலர்களிடம் அவரவர் துறைகளின் சார்பில் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களிடையே கரோனா வைரஸ் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து அதிக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் விரிவாக பேசப்பட்டது.
இந்தக்கூட்டத்தில் அமைச்சர் கூறியதாவது:
*கரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய்த்தொற்றாக (Pandemic) அறிவித்துள்ளது.
* மத்திய அரசு கரோனா வைரஸ் நோய்த்தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்துள்ளது.
* தற்பொழுது உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து இன்று அலுவலர்களுடன் விரிவான ஆய்வை மேற்கொண்டேன்.
நோவல் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
* வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நோய் அறிகுறிகள் இருந்தால் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.
* உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, நோவல் கரோனா வைரஸ் காய்ச்சல் (COVID-19) 80 விழுக்காடு முறையாக சோப்பு உபயோகித்து கைகளை நன்கு தேய்த்துக் கழுவினாலே வராமல் தடுக்க முடியும் என்பதன் அடிப்படையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்களிலும் முறைப்படி கை கழுவும் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதிகமாக பொதுமக்கள் கூடுமிடங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோவல் கரோனா வைரஸ் காய்ச்சல் (COVID - 19) குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள், அனைத்து அங்கன்வாடி மையங்கள், மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவை மார்ச் 31 வரை மூட உத்தவிடப்பட்டுள்ளது.
* அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கான உணவுப் பொருட்களை அந்தந்த குடும்பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
* அதன்படி மேற்கண்ட நிறுவனங்கள் தமிழக அரசின் உத்தரவை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அந்நிறுவனங்கள் நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த புதிய நிகழ்ச்சிகளும் திருமண மண்டபங்களில் மார்ச். 31 வரை நடைபெறுவதை உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்.
* கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிப்பாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு தெர்மோ ஸ்கேனர் கருவியின் மூலம் பரிசோதிக்கப்படுகிறது.
* மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பாக அனைத்து மாவட்ட எல்லைகளிலும் பேருந்துகள், தொடர்வண்டிகள் என பொதுமக்கள் பயணிக்கக் கூடிய அனைத்து விதமான இடங்களிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும், அவர்களை பரிசோதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
* தினமும் 10 முதல் 15 முறை கைகளை சோப்பு உபயோகித்து கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.
* இருமும்போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும்.
* கரோனா வைரஸ் காய்ச்சல் (COVID-19) பாதித்துள்ள நாடுகளுக்குப் பயணம் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
* அதிகமாக பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதை அந்தந்த நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக தனியார் நிறுவனங்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் தேவைப்படின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களை அணுகலாம்.
* திருமண மண்டபங்களில் டைனிங் டேபிள், சேர் மற்றும் அறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும்.
* டாக்ஸி டிரைவர்கள் எப்போழுதும் ஏ.சி. போட்டு வாகனத்தை இயக்காமல் அவ்வப்போது சூரிய ஒளி உள்ளேபடும்படி வாகனத்தை இயக்க வேண்டும். அடிக்கடி கை படும் இடங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் வேண்டும்.
* பொதுமக்கள் தொடக்கொடிய இடங்களான படிக்கட்டு கைப்பிடிகள், லிஃப்ட் பட்டன் மற்றும் நகரும் படிக்கட்டுகள் ஆகியவற்றை லைசால் கலந்த நீரினால் சுத்தம் செய்ய வேண்டும்.
* சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளும் நபர்களைப் பாதுகாப்பு கவசத்துடன் பணிபுரிய வைத்தல் வேண்டும்.
* வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் பெயர், முகவரி மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை கண்டிப்பாகப் பதிவு செய்து தகவல் அளிக்க வேண்டும்.
* நோவல் கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் இருப்பின் அவர்களின் முழு விவரங்களையும் உடனடியாக அரசு பொது சுகாதார இயக்குநரகத்திற்கும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிற்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
* பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளில் 3000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாநகராட்சியின் சார்பில் 46 கிருமி நாசினி தெளிக்கும் வாகனங்களும், கைகளால் இயக்கும் 200 கிருமி நாசினி இயந்திரங்களும், 200 பவர் ஸ்ப்ரேயர் (Power Sprayer) இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
* நோவல் கரோனா வைரஸ் (COVID-19) தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் இருப்பின் 24 மணிநேர உதவி எண் 011-23978046, மாநில தொலைபேசி 104, 044-29510400/044-29510500, 9444340496, 8754448477 மற்றும் தொற்றுநோய் மருத்துவமனை 044-25912686/87/88 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
* எனவே, பொதுமக்கள் மருத்துவமனைகள், மருத்துவர்கள், வணிக ரீதியான நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களின் உரிமையாளர்கள், அரசின் மேற்குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைப்பிடித்து கரோனா வைரஸ் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளவும்”.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ராஸ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், பெருநகர சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன், நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையகம்) ஜெயராமன், சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு) ஆர்.தினகரன், சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்ஹா, சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையாளர் ஏ.அருண், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்கள் மதுசுதன் ரெட்டி, (சுகாதாரம்), பி.என்.ஸ்ரீதர், ஆகாஷ் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.