

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி குழு தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான குழுவாக மாறிவிடக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் 533 தனியார் பள்ளிகளுக்கு 2015-16, 2016-17, 2017-2018 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளுக்கான கட்டணத்தை நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு அறிவித்திருக்கிறது. அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணங்களின் அளவு அதிர்ச்சி அளிக்கிறது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் அதிகபட்சமாக தொடக்க நிலை மழலையர் வகுப்புக்கு (எல்.கே.ஜி.) 46,948 ரூபாயும், 12 ஆம் வகுப்புக்கு ரூ.52,393 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி.க்கு 41,987 ரூபாயும், 12 ஆம் வகுப்புக்கு 51,982 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சூளைமேடு தனியார் பள்ளியில் எல்.கே.ஜிக்கு 34,001 ரூபாயும், 12 ஆம் வகுப்புக்கு 48,521 ரூபாயும், மயிலாப்பூர் தனியார் பள்ளியில் எல்.கே.ஜிக்கு 38,720 ரூபாயும், 12 ஆம் வகுப்புக்கு 48,158 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கலாம் என்று அரசு கட்டண நிர்ணயக் குழு அறிவித்திருக்கிறது. இது அடிப்படை கல்விக் கட்டணம் மட்டுமே.
இத்துடன் சிறப்புக் கட்டணம், பாட நூல் கட்டணம், நன்கொடை ஆகியவற்றையும் சேர்த்தால் தனியார் பள்ளிகளில் ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படக் கூடும்.
சென்னையில் மொத்தம் 76 தனியார் பள்ளிகளுக்கு இப்போது கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலான பள்ளிகளில் 12 ஆம் வகுப்புக்கான கட்டணம் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கும் இதே அளவில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தையும் அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி குழு தான் நிர்ணயிக்கிறது. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழுவின் தரச்சான்று பெறப்பட்ட படிப்புகளுக்கு ரூ.45 ஆயிரமும், தரச்சான்று பெறப்படாத படிப்புகளுக்கு ரூ.40 ஆயிரமும் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என்று இக்குழு அறிவித்திருக்கிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து இதே கட்டணம் தான் நடைமுறையில் உள்ளது. அதிக பயிற்சி பெற்ற பேராசிரியர்களும், கூடுதல் கட்டமைப்பு வசதிகளும் தேவைப்படும் பொறியியல் படிப்புக்கு ரூ. 40 ஆயிரம் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், எல்.கே.ஜிக்கு அதைவிட அதிக கட்டணம் வசூலிக்க அரசே அனுமதிப்பது எந்த அடிப்படையில் நியாயமாக இருக்கும் என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட பல மடங்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது அவற்றுக்கு துணை போகும் வகையில் இன்னும் அதிக கட்டணத்தை அரசு நிர்ணயிப்பது முறையற்றது. எந்தவொரு கட்டணத்தையும் நிர்ணயிக்கும் போது, அதற்கான காரணங்கள் விளக்கப்பட வேண்டும்.
ஆனால், தனியார் பள்ளிகளின் கட்டணம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படுவதில்லை. இது தனியார் பள்ளிகளுக்கு சாதகமான கட்டண நிர்ணயக் குழுவின் சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது. இந்த போக்கை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி குழு தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான குழுவாக மாறிவிடக்கூடாது.
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாள் தோறும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் எந்த ஒரு தனியார் பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதிலிருந்தே அவர்களுக்கும் அரசு நிர்வாகத்திற்கு இடையே நிலவி வரும் நல்லுறவை புரிந்து கொள்ள முடியும்.
ஒருபுறம் அரசு பள்ளிகளில் தரத்தை திட்டமிட்டு குறைத்து, பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி ஓடும் நிலையை ஏற்படுத்துவது, தனியார் பள்ளிகளில் கட்டணத்தை விருப்பம் போல உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது என மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டுவிட்டு, இன்னொரு புறம் ஒட்டுமொத்த வளர்ச்சி.... உள்ளடக்கிய வளர்ச்சி என வெற்று முழக்கங்களை எழுப்புவதிலிருந்தே அரசின் இரட்டை வேடத்தை உணரமுடியும்.
கல்வி தான் வளர்ச்சிக்கான அடிப்படை என்பதால், அதை அனைத்து தரப்பினரும் பெறும் வகையில் அரசு பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்தவும், தனியார் பள்ளிகளில் கட்டணத்தைக் குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.