

ஜி.கே.வாசனை ராஜ்யசபாவுக்கு அழைத்து அவரை வைத்து ஏதோ ஒரு கணக்குப் போடுகிறது பாஜக. வாசன் மத்திய அமைச்சரவையிலும் அமரவைக்கப்படலாம் என்ற செய்திகளும் ஓடுகின்றன. ஆனால், வாசனுக்காக ஒதுக்கிய சீட்டை முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்காக வைத்திருந்ததாம் அதிமுக. பாஜகவின் நிர்பந்தத்தை தட்ட முடியாமல் போனதால் அந்த இடத்தை வாசனுக்கு வழங்கி விட்டார்களாம். இதையடுத்து, “விசுவநாதன் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறார். நீங்கள் அவரிடம் கொஞ்சம் பேசிவிடுங்கள்” என்று ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் வாசனிடம் சொன்னார்களாம். இதையடுத்து விசுவநாதனைத் தொடர்பு கொண்ட வாசன், “உங்களுக்கான வாய்ப்பைத்தான் எனக்கு தந்ததாகச் சொன்னார்கள். அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி” என்று சொன்னாராம். அதற்கு தனது வருத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேசிய விசுவநாதன், “உங்களுக்கு வாய்ப்பளித்ததில் எனக்கும் சந்தோஷம் தான்... நீங்கள் சிறப்பாக பணியாற்ற எனது வாழ்த்துகள்” என்று சொன்னாராம்.
- காமதேனு இதழிலிருந்து (மார்ச் 22, 2020)